இளையராஜா இசையமைப்பில் சினேகன் நாயகனாக நடிக்கவிருக்கும் ‘இராஜராஜ சோழனின் போர்வாள்’ விரைவில் ஆரம்பமாக உள்ளது.
உலக சினிமா வரலாற்றில் மக்கள் முன்னிலையில் இளையராஜா மெட்டமைக்க இப்படத்தின் துவக்க விழா அடுத்த மாதம் 11ம் தேதி கரூரில் உள்ள சித்தர் கருவூரான் சன்னதியில் நடைபெற உள்ளது.
சித்தர் கருவூரான்தான் இராஜராஜ சோழனின் குரு ஆவார். இவர் இத்திருக்கோயில் உள்ள சன்னதியில் ஜீவ சமாதி அடைந்ததாய் சொல்லப்படுகிறது.
இப்பட விழா மூலம் உலக சினிமா வரலாற்றில் மெட்டமைக்கும் நிகழ்ச்சியை மக்கள் முன்னிலையில் வைத்த பெருமையை தமிழ் சினிமா அடையப் போகிறது.
இத்திரைப்படத்தை ஆர்.எஸ்.அமுதேஷ்வர் எழுதி, இயக்குகிறார். இவர் இயக்குனர் பாசில், தம்பி ராமையாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் கவிஞர் சினேகன் ஏற்கெனவே ‘யோகி’ திரைப்படத்தில் வில்லனாகவும், ‘உயர் திரு 420’ படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் சினேகா, ஸ்ரேயா, தம்பி ராமையா, அப்புக்குட்டி, அவினாஷ், புதுமுக நாயகி நாட்டியா, ‘சூப்பர் சிங்கர்’ ஜுனியர் புகழ் அனு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தை உழவன் திரைக்களம் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது.