தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருபவர் ஸ்டன் சிவா.
‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் “என்ன மணி, என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என கமல் கேட்கும்போது “வேணாம் ராகவன்” என கமல் முன்பே தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்டன் சிவா.
அவ்வப்போது ஒரு சில படங்களில் தலை காட்டி விட்டுப் போன ஸ்டன் சிவா, ‘கோலி சோடா 2’ படத்தில் முழு வில்லனாக அறிமுகம் ஆனார்.
தமிழில் கமல்ஹாசன், விஜய், விக்ரம், இந்தியில் சல்மான் கான், அக்ஷய் குமார் என பல நடிகர்களுடன் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார்.
‘கோலி சோடா 2’ படத்தில் சாதிக் கட்சித் தலைவராக நடித்துள்ள ஸ்டன் சிவாவின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இது குறித்து ஸ்டன் சிவா கூறும்போது,
“முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன், ஆனால் ஸ்டண்ட் மேன் வாய்ப்புதான் கிடைத்தது. ஸ்டண்ட் மாஸ்டரான பிறகு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எனக்கு இயக்குனர் விஜய் மில்டன் ‘கோலி சோடா 2’ படத்தில் சீமைராஜா என்ற சாதி சங்கத் தலைவர் கதாபாத்திரத்தை கொடுத்தார். அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்த பிறகு எனக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த பாராட்டுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் இயக்குனர் விஜய் மில்டனுக்கும், பத்திரிகையாளர்கள் உட்பட என் நலனை விரும்பும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
கடந்த வாரம் தமிழகம் முழுக்க 240 திரையரங்குகளில் வெளியான ‘கோலி சோடா 2’, அதே அளவு திரையரங்குகளில், நல்ல வரவேற்புடன் இந்த வாரமும் தொடர்கிறது.