செல்வராகவன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கான பின்னணி இசையை அனிருத் இசைத்து வருகிறாராம்.
செல்வராகவன் திரைப்படம் இயக்க ஆரம்பித்ததும் யுவன்ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி போட்டு பல ஹிட்களை கொடுத்தார். அதன் பின் அவரிடம் இருந்து பிரிந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களுக்கு ஜிவி. பிரகாஷ் குமாருடன் இணைந்தார்.
மீண்டும் அவரிடமிருந்து பிரிந்து ‘இரண்டாம் உலகம்’ படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜுடன் முதன் முறையாக இணைந்தார். இப்படத்தின் பாடல்களும் சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஆனால், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் படத்தின் பின்னணி இசையமைப்பிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகிவிட்டார்.
“படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஹாரிஸுக்கு வேறு படங்களின் வேலை அதிகமாக இருப்பதால், அனிருத் இப்படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியை ஏற்றுள்ளார்”, என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தை விட எந்த பெரிய படத்திற்காக ஹாரிஸ் பிஸியாக இருக்கிறார் என்பது தெரியவில்லை.
என்ன பிரச்சனை என்பது வெளி உலகத்திற்கு தெரியாமலா போய்விடும்…