‘ராவணன்’ படத்திற்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த மணிரத்னம், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறாராம்.
இந்த முறை தமிழ் நடிகர்களை நடிக்க வைக்காமல், தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கப்பட இருக்கும் படத்தை தெலுங்க ஹீரோக்களை வைத்தே இயக்கவிருக்கிறார் என்கிறார்கள்.
இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களான மகேஷ் பாபு, நாகார்ஜுனா ஆகிய இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாம்.
மகேஷ் பாபு இதுவரை மணிரத்னம் இயக்கிய படத்தில் நடிக்கவில்லை.
ஆனால், நாகார்ஜுனா , மணிரத்னம் இயக்கி 1989ம் ஆண்டு வெளிவந்த ‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்குப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த ஆண்டிற்கான சிறந்த என்டர்டெயின்மென்ட் படம் என்ற தேசிய விருதையும் பெற்றது.
இப்படம் தமிழிலும் ‘இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. இளையராஜாவின் இனிமையான பாடல்களே இந்த படம் வெற்றி பெற காரணமாக அமைந்தது.
இப்போது ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் நாகார்ஜுனா.
ஆனால், இவையனைத்தும் தகவலாக வரும் செய்திதான். மணிரத்னம் படத்தைப் பொறுத்தவரையில் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதே நம்பகமானது. கடைசி நேரத்தில் கூட அவர் யாரை வேண்டுமானாலும் மாற்றலாம்.
அதுவரை, மணிரத்னம் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்…