இன்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு என்ன எழுதுவது என்று யோசித்த வேளையில் காலையில் நாம் கலந்து கொண்ட ‘கண்ணன் 1 காதலி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எம்ஜிஆர் அவர்களின் பெருமை பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவத்தைக் கேட்க நேர்ந்தது.
இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர் என பன்முகம் கொண்டவர் வி.சி.குகநாதன், எம்ஜிஆரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் , திரைப்படத்தின் இசையை வெளியிட்டுப் பேசினார்.
வி.சி. குகநாதன் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை எழுதியவர். எம்ஜிஆர் நடித்த ‘புதிய பூமி, குமரிக் கேட்டம்’, சிவாஜி நடித்த ‘ராஜபார்ட் ரங்கதுரை’, பிரபுதேவா, அரவிந்த்சாமி, கஜோல் நடித்த ‘மின்சாரக் கனவு’ உள்ளிட்ட எண்ணற்ற வெற்றிப் படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார்.
‘கண்ணன் 1 காதலி 2’ திரைப்பட இசை வெளியிட்டு அவர் பேசியதாவது,
“நான் பள்ளியில் படித்த காலத்தில் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகனாக இருந்தேன். ஒரு முறை அவருடைய படங்களைப் பார்த்து அவருக்கு கடிதம் எழுதினேன். தங்களைப் பார்க்க எனக்கு அனுமதி அளித்து நேரம் தருமாறு கேட்டிருந்தேன்.
அதற்கு அவருடைய உதவியாளர் பதிலளித்தார். நீங்கள் நேரில் வரவேண்டாம், உங்கள் ஊருக்கு அவர் வரும் போது நீங்கள் சந்திக்கலாம் என்றார்.
ஆனால், அவரைச் சந்திக்கும் நாட்கள் எனக்கு உடனே கிடைத்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த போது, ஒரு விழாவிற்கு அவரை அழைத்து வர சந்தர்ப்பம் கிடைத்தது.
அந்த விழா முடிந்ததும், அவரிடம் எனக்கு நடிக்கும் ஆசை உள்ளது, வாய்ப்பு கிடைக்குமா என கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவரை நேரில் பார்த்ததும், அவருடைய அழகுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த ஆசையையே அறவே வெறுத்தேன்.
அவர் படிப்பைத் தவிர வேறு என்ன தெரியும் என்று என்னிடம் கேட்ட போது, கதை எழுதுவேன் என்றேன். உடனே, அவருக்கு ஒரு கதை எழுதித் தருமாறு கேட்டார்.
சில நாட்கள் கழித்து, அவரிடம் போய் ஒரு கதை சொன்னேன். ஆனால், அந்த கதை பெண்களை மையப்படுத்திய கதை. எனக்காக நீ கதை எழுத வேண்டுமென்றால் இப்படியா எழுதுவாய் என்றார். நானும் சில நாட்கள் சந்தர்ப்பம் கேட்டு, நான்கு நாட்கள் கழித்து வேறு ஒரு கதையுடன் சென்றேன்.
அந்த கதைதான் ‘புதிய பூமி’ திரைப்படமாக வெளிவந்தது. என்னை முதன் முதலாக திரையுலகில் ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தியது அவர்தான்.
அதன் பின் ஒரு நாள் என்னை சந்திக்க தயாரிப்பாளர் கோவை செழியனை, எம்ஜிஆர் அவர்கள் அனுப்பி வைத்தார். அவர் நேராக வகுப்பறைக்கு வந்து பேராசிரியடம், உங்களைப் பார்க்கத்தான் நான் வந்தேன் என்றார். அவரோ என்னையா என்று கேட்டார். நீங்கள்தானே வி.சி.குகநாதன் என்றார். அவரோ, நானில்லை, குகநாதன் இந்த வகுப்பின் மாணவன் , என்று என்னை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.
கோவை செழியன் அவர்களுக்கு மிகவும் ஆச்சரியம். ஒரு கல்லூரி மாணவரைப் பார்க்க எம்ஜிஆர் நம்மை அனுப்பி இருக்கிறாரே என்று.
அவருக்கு நான் சொன்ன கதைகளில் ஒன்றுதான் பின்னர் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘குமரிக்கோட்டம்’ திரைப்படம்.
எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் அதன் பின் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கதைகளை திரைப்படங்களுக்காக எழுதியிருக்கிறேன்.
ஒருவரிடத்தில் உள்ள திறமையை, அத்துடன் நிறுத்திக் கொள்ள வைக்காமல், அவர் மேலும் வளர்வதற்கு வாய்ப்புத் தரும் ஒரே மனிதர் எம்ஜிஆர் அவர்கள்.
அவர் ஏற்றி வைத்த விளக்குதான் இன்று வரை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ” என்றார்.
எம்ஜிஆர் பிறந்த நாளில் அவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சி….