கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முறையாக நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி “மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம்” ஆகிய படங்களில் சூப்பர் ஹிட்டான பாடல்கள் இடம் பெற காரணமாக அமைந்தது.
அதன் பின் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். கௌதம் மேனன் அதற்கடுத்து இயக்கிய ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானும், ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திற்கு இளையராஜாவும் இசையமைத்தனர்.
தற்போது பிரிந்த கூட்டணி மீண்டும் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் ஒன்று சேர்ந்துள்ளது. அஜித் நடிக்கும் படத்திற்கு இந்தப் படம் மூலம் முதன் முறையாக ஹாரிஸ் இசையமைத்திருப்பதால் இந்தப் படத்தின் பாடல்கள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது.
படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாம், அதோடு படத்தின் டீசரை இந்த மாதமே வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘கத்தி, லிங்கா’ படங்களின் இசை உரிமையை வாங்கியுள்ள ஈராஸ் மியுசிக் நிறுவனம் மிகப் பெரும் தொகை கொடுத்து ‘என்னை அறிந்தால்’ இசை உரிமையையும் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.