பழம் பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்…

vs raghavanபழம் பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சென்னையில் இன்று மாலை காலமானார், அவருக்கு வயது 90.

1925ம் ஆண்டு காஞ்சிபுரத்தை அடுத்துள்ள வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர், அதற்குப் பின்னர் செங்கல்பட்டிலும், தாம்பரத்திலும் பள்ளிப் படிப்பை முடித்தார்.

சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள ராகவன், ஆரம்ப காலத்தில் ‘மாலதி’ என்ற இதழிலும் பத்திரிகையாளராக வேலை பார்த்திருக்கிறார். அவருக்கு ஜர்னலிஸ்ட் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருந்ததாம்.

1940களின் இறுதியில் ‘இந்தியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ என்ற நாடகக் குழுவை ஆரம்பித்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்தக் குழுவில் கே.பாலசந்தர் போன்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.

30 வயதிலேயே நாயகர்களுக்கும், நாயகிகளுக்கும் அப்பாவாக நடித்தவர் நிஜ வாழ்க்கையில் 40 வயதில்தான் திருமணம் செய்து கொண்டார்.

சிவாஜிகணேசனின் மிகத் தீவிர ரசிகரான வி.எஸ். ராகவன் அவரை இன்டர்நேஷனல் நடிகர் என்றுதான் சொல்வாராம்.

அந்தக் காலத்தில் எம்ஜிஆர் நடித்த அனேகப் படங்களில் ராகவன் நடித்திருக்கிறார். ஆனால், இன்று அவரை பல இயக்குனர்கள் நடிக்க அழைப்பதில்லை என்று சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தலைமுறை இயக்குனர்களில் சிம்புதேவன் அவரை “இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக் கேட்டை முரட்டு சிங்கம்” ஆகிய படங்களில் நடிக்க வைத்தார்.

விரைவிலேயே நான் அமைதியாக விடைபெற்றுச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, என்று அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

சமீப காலங்களில் அவருடைய குரலை பல டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கிண்டலடித்து மிமிக்ரி செய்ததுதான் நமக்கு வருத்தத்துடன் ஞாபகத்திற்கு வருகிறது.

எம்ஜிஆர், சிவாஜிகணேசன் போன்ற நடிகர்களை யாராவது அப்படிப் பேசுவார்களா…வி.எஸ்.ராகவன் அவர்களின் விஷயத்தில் ஒரு சிறு மரியாதையைக் கூட பலர்  கடைபிடிக்காதது கண்டிக்க வேண்டிய விஷயம்.

அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்…

Read Previous

‘ஐயங்கன்’ – மாய மந்திரக் கதை…

Read Next

பாபி சிம்ஹா உருமும் ‘உறுமீன்’…முதல் பார்வை வெளியீடு…