“தீ நகர், நெல்லை சந்திப்பு, காசேதான் கடவுளடா, அகம் புறம்” ஆகிய படங்களை இயக்கிய திருமலை தற்போது ‘மான் வேட்டை” என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் ஷரண், தேஜஸ், பிரதீப், சுமன் ஷெட்டி, சுனிதா கோகை, பிரதீப், மாயா, வனிதா, கஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படம் ஒரு த்ரில்லர் படம். ஒரு படம் எடுப்பதற்கு சில பல கோடிகள் செலாவாவதுதான் வழக்கம். ஆனால், ஒரு கோடிக்குள் ஒரு படத்தை எடுத்து விட முடியும் என இந்தப் படத்தில் நிரூபித்திருப்பதாக பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் திருமலை.
“ஷரண் நிலாவை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறான். தன் காதலி நிலாவை அழைத்துக் கொண்டு நிம்மதியை தேடி மனிதர்களே இல்லாத, மலை பிரதேசத்திற்குச் செல்கிறான். அப்போது அங்கு வரும் மனிதர்களால் இவர்கள் மிருகத்தனமாக கொல்லப் படுகிறார்கள். கொல்லப்பட்ட இவர்கள் மாபெரும் சக்தியாக மீண்டும் உயிர்பெறுகிறார்கள்.
சில நாட்களுக்கு பிறகு…
நான்கு நண்பர்கள் தங்களின் காதலிகளோடு அந்த மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா வருகிறார்கள். இயற்கையை ரசித்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது எதிர்பார்க்காமல் சில திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவரும் காட்டிலேயே கொல்லப்பட்டார்களா…? இல்லை… அனைவரும் உயிருடன் தப்பித்துவிட்டார்களா…? என்பதுதான் படத்தின் கதை.
பரபரப்பான திகில் சம்பவங்களுடன் அழகான மலைப் பிரதேசத்தில் 14 நாட்களிலேயே படத்தை எடுத்து முடித்திருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் திருமலை.
படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது, படம் விரைவில் திரைக்கு வருகிறது.