விபின் மூவி பட நிறுவனம் சார்பாக எஸ்.குமார், A. ராமசாமி, D. சரவண மாணிக்கம், R. மூர்த்தி, A. லட்சுமணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘வெத்து வேட்டு’.
ஹரீஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ‘விழா’ பட நாயகி மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, கஞ்சாகருப்பு, ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக் பாண்டி, கோபால், மணி, மாக்கான், கிரேன் மனோகர், போண்டா மணி, வெங்கல் ராவ், சின்ன சில்க் உமா, நந்தகுமார், கம்பம் மீனா, நாஞ்சில் சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் மணிபாரதி கூறியதாவது,
“கிராமத்து காதலை மிக யதார்த்தமாக இதில் பதிவு செய்திருக்கிறோம். ஜனரஞ்சகமான இளைஞர்களுக்கு பிடித்த காதல் படமாக இது இருக்கும். எழுபது சதவீதம் காமெடி, இருபது சதவீதம் காதல் மற்றும் பத்து சதவீதம் குடும்ப சென்டிமென்ட் கலந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
படத்தின் பாடல் காட்சிகளுக்கு பத்து நாட்களுக்கு 300 துணைநடிகர்கள் வரவழைக்கப்பட்டு பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கொடுத்து பாராட்டியுள்ளனர்.
இந்தப் படத்தின் படிப்பிடிப்பு கடைசி நாளன்று படப்பிடிப்பிற்கு உதவிய திருச்சி அருகில் உள்ள கோப்பு என்ற கிராம மக்கள் ஐநூறு பேருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தோம். அவர்கள் அனைவரும் படக் குழுவினரை படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள்.
படப்பிடிப்பு திருச்சி, பொள்ளாச்சி, கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது,” என்றார் இயக்குனர் S.மணிபாரதி.