எம்.ஜி.ஆரால் 1969 ல் ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் இரட்டை இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ். அதன் பின் “இதய வீணை, ஆட்டுக்கார அலமேலு, பசி, தாயில்லாமல் நானில்லை, சட்டம் ஒரு இருட்டறை, நீயா, டார்லிங் டார்லிங் டார்லிங், எங்க சின்ன ராசா” உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்கள். அந்த இரட்டையர்களில் சங்கர் மறைந்த பிறகும், கணேஷ் அதே பெயரில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார், இசையமைத்தும் வருகிறார். இவர் தற்போது பின்னணி இசையமைத்துத் தந்திருக்கும் படம் ‘எண்ணம் புது வண்ணம்’.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட எல்லா மொழி படங்களையும் சேர்த்து இதுவரை 1552 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் சங்கர். இது நிஜம்தானா என்பதை நம்ப முடியாமல் அவரிடமே கேட்டால், ‘ஆமாம்…’ என்கிறார் கூலாக. ‘இறைவன் என் மூலமாக இசையை உலகத்திற்கு கொடுத்திருக்கான். இதில் நான் பெருமைப்பட என்ன இருக்கிறது’ என மிகவும் பணிவாகச் சொல்கிறார்.
“மன்னன், வெற்றிவிழா”, உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிய ஆம்பூர் ஜெ.நேதாஜி தயாரித்திருக்கும் படம்தான் ‘எண்ணம் புது வண்ணம்’. சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக சுமார் பத்தாண்டுகள் பணியாற்றிய இவர், இப்போது முதன் முறையாக தயாரித்திருக்கும் படம் இது.
விவேக் ராஜ் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். திவ்யா நாகேஷ், சத்ய சாய் என்று இரண்டு ஹீரோயின்கள். கதையில் வரும் முக்கியமான கேரக்டர் ஒன்றில் ஆம்பூர் நேதாஜியே நடித்திருக்கிறார். பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவிடம் பணியாற்றிய ராகவன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சௌந்தர்யன் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
தாயன்புக்காக ஏங்கும் ஒருவன், தொடர்ந்து மூன்று பெண்களால் ஏமாற்றத்திற்கு ஆளாகிறான். அதற்கப்புறம் பெண்கள் பற்றிய எண்ணத்தையே மாற்றிக் கொள்ளும் அவன், பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதை லவ் வித் ஆக்ஷன் த்ரில்லர் வகை படமாக சொல்லியிருக்கிறார் ராகவன்.
முழு படத்தையும் பார்த்த நேதாஜி, இந்த படத்திற்கு பின்னணி இசையை சங்கர் கணேஷ் அமைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாராம். தான் இசையமைக்காத படமாக இருந்தாலும் கூட, நேதாஜியின் நட்பிற்காக பின்னணி இசையை அமைத்துக் கொடுத்த சங்கர் கணேஷ் அதற்காக ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
“சந்திரமுகி, சிவகாசி,” தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘ஒக்கடு’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சேகர் வி.ஜோசப் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். படத்தின் பின் தயாரிப்பு இயக்குனர் ஷண்முகா வெங்கடேஷ்.
‘எண்ணம் புது வண்ணம்’ மார்ச் இறுதி வாரத்தில் திரைக்கு வருகிறது.