இளையராஜாவின் இசையில் குணசேகர் பிரம்மாண்டமாக இயக்கி வரும் ‘ருத்ரமாதேவி’ படத்தின் இசை வெளியீட்டையும் பிரம்மாண்டமாகவும் புதுமையாகவும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். சரித்திரக் காலக் கதையான இந்தப் படத்தின் இசை வெளியீட்டை வாரங்கல் கோட்டைக்கு அருகில் ஒரு நாளும், விசாகப்பட்டிணத்தில் மற்றொரு நாளும் என இரு நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
வாரங்கல்லில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் மூன்று பாடல்களையும், விசாகப்பட்டிணத்தில் நடைபெறும் விழாவில் மற்ற பாடல்களையும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இளையராஜாவிற்கு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அந்தக் காலத்திலிருந்து பல ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். தெலுங்குத் திரையுலகின் பேர் சொல்லும் பல முக்கிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ருத்ரமாதேவி’ படத்திற்காக மிகவும் ஈடுபாட்டுடன், வெளிநாட்டு இசைக் கலைஞர்களுடன் இளையராஜா இசையமைத்துக் கொடுத்துள்ளார். ஸ்டீரியோஸ்கோபிக் 3டி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இளையராஜா இசையில் காண்பது புது அனுபவமாக இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.