வாய்ப்பு கொடுத்தவரிடமே வம்பு….இது சரியா பாபி சிம்ஹா…?

‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்த பிறகு ’16 வயதினிலே’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பரட்டை’ கதாபாத்திரம் போன்று அற்புதமான நடிப்பு என்று ரஜினிகாந்திடம் பாராட்டு, இப்போது தேசிய விருது என புகழ் பெற்று வரும் பாபி சிம்ஹா, தனக்கு கதாநாயகனாக நடிக்க  வாய்ப்பு கொடுத்தவருரிடமே தற்போது வம்பு செய்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.

பாபி சிம்ஹாவை தமிழ், தெலுங்கில் வெளியான ‘நேரம்’ படத்தில் நடிக்க அந்தப் படத்தின் இயக்குனரான தன் நண்பரான அல்போன்ஸ் புத்திரனிடம் சொல்லி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர்தான் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் இயக்குனர் மருது பாண்டியன்.

பாபி சிம்ஹா யார் என்பதை அடையாளம் காட்டியதே ‘நேரம்’ படம்தான். அப்பட வாய்பை வாங்கிக் கொடுத்த மருதுபாண்டியன் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தில்  பாபி சிம்ஹாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக டப்பிங் பேச பாபி சிம்ஹாவை மருதுபாண்டியன் அழைத்த போதுதான் வம்பு ஆரம்பமானது.

“டப்பிங் பேச வரவேண்டுமென்றால் 25 லட்ச ரூபாய் பணம் கொடுங்கள், இல்லையென்றால் படத்தின் வருமானத்தில் தனக்கும் பாதி பங்கு தர வேண்டும், வியாபாரம் முடிந்து வசூலானதும் மொத்த கணக்கு வழக்குகளையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கண்டிஷன் மேல் கண்டிஷன் போட்டிருக்கிறார்.

படம் வெளிவந்த பிறகு பாபி சிம்ஹா கேட்பதைத் தருகிறேன் என இயக்குனர் மருதுபாண்டியன் சொல்லியும் கேட்காத பாபி சிம்ஹா, அதன் பின் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சிக்கும், எந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கும் வரவில்லை. இப்போது திரையுலக பிரபலங்கள் பலர் பாபி சிம்ஹாவிடம் பேசியும் 25 லட்சம் பணம் கொடுத்தால்தான் வருவேன் என்று சொல்லிவிட்டாராம்.

இன்றைய உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அந்தக் காலத்தில் சிறிய தயாரிப்பாளர்கள், அறிமுக இயக்குனர்கள் பலருக்கும் பிரச்சனையில்லாமல் நடித்துக் கொடுத்ததால்தான் இன்றும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

அதிலும் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம் திரைப்பட உதவி இயக்குனர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கும் ஒரு சிறந்த படமாக தயாராகியுள்ளதாம். தனக்கு நல்ல ‘நேரம்’ காட்டிய மருதுபாண்டியனின், சினிமாவைப் பற்றிய படத்திற்கே இப்படி சிக்கலை வரவைக்கும் விதத்தில் பாபி சிம்ஹா நடந்து கொள்வது சரியா என திரையுலகத்தினரே கேள்வியை எழுப்புகிறார்கள்.

Read Previous

‘நான் கொஞ்சம் சென்சிட்டிவ்’ – யுவன் ஷங்கர் ராஜா

Read Next

இளையராஜாவை சந்தித்த அனுஷ்கா…

Most Popular