ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக முரளி இராமநாராயணன் தமிழில் வெளியிட இருக்கும் படம் ‘ருத்ரமாதேவி’.
குணசேகர் இயக்கி வரும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். அவருடைய இசையில் உருவாகி வரும் 1001வது படம் இது.
இப்படத்தின் பின்னணி இசைச் சேர்ப்புக்காக இளையராஜா லண்டன் பயணமாக உள்ளார். ‘ருத்ரமாதேவி’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா சிறு வயதிலிருந்தே இளையராஜாவின் தீவிர ரசிகையாம்.
அதனால், இளையராஜாவைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ஆசைப்பட்டிருக்கிறார். அவருடைய ஆசையை தயாரிப்பாளர் முரளி இராமநாராயணன், இயக்குனர் குணசேகர் நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள்.
சென்னைக்கு வந்த அனுஷ்கா, இளையராஜாவை அவருடைய ஸ்டுடியோவிற்குச் சென்று சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேசினார். ‘ருத்ரமாதேவி’ படத்திற்கு இசையமைத்து வருவதைப் பற்றிய அனுபவங்களை அனுஷ்காவிடம் இளையராஜா பகிர்ந்து கொண்டார்.
இப்படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜா லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
‘ருத்ரமாதேவி’ கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.