பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் சென்னையில் ‘மைன்ட் ஸ்கிரீன் திரைப்படக் கல்லூரி’யை நடத்தி வருகிறார்.
2006ம் ஆண்டு ஆரம்பமான இந்தக் கல்லூரி, திரைப்படங்களில் சிறப்புடன் பணியாற்றக் கூடிய ஒளிப்பதிவாளர்களை உருவாக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
மிகக் குறுகிய காலத்திலேயே மிகச் சிறந்த திரைப்படத் தொழில் நுட்பக் கல்லூரியாக புகழ் பெற்ற இந்தக் கல்லூரியிலிருந்து படித்து வெளிவந்தவர்கள் தற்போது சிறந்த ஒளிப்பதிவாளர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.
திரைப்படங்களுக்கு சிறந்த திரைக்கதை எழுதுபவர்களை உருவாக்க ‘திரைக்கதை எழுதும் பயிற்சி’ வகுப்புகளும் இங்கு துவங்கப்பட்டது.
அவ்வப்போது, நடிப்புப் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட்டு வந்த இந்தக் கல்லூரியில் தற்போது அடுத்த மாதம் முதல் நடிப்புப் பயிற்சி வகுப்புகளும் ஆரம்பமாக உள்ளன.
சிறந்த நடிப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன், தனது நடிப்பிற்காக இரு முறை தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, தலைவாசல் விஜய் ஆகியோரின் வழி நடத்துதலோடு 6 மாத கால நடிப்புப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன.
அவர்களோடு நடிப்புப் பயிற்சி வழங்கும் சிறந்த ஆசிரியர்களை தனது நேரடி மேற்பார்வையில் ராஜீவ் மேனன் தேர்ந்தெடுத்துள்ளார். நடிப்புப் பயிற்சி வகுப்புகளின் தலைவராக நடிகர் தேவேந்திரநாத் சங்கர நாராயணன் செயல்பட உள்ளார்.
களரி மற்றும் யோகா பயிற்சிகளை பழனி, மற்றும் நாடகக் கலைஞர்களான பாலா, ஜானகி ஆகியோரும் நடிப்புப் பயிற்சி வகுப்புகளை எடுக்க உள்ளனர்.
சென்னை, அடையாறு திரைப்படக் கல்லூரி முன்னாள் முதல்வரான ஸ்ரீதரன் ‘மைன்ட் ஸ்கிரீன் திரைப்படக் கல்லூரியின்’ முதல்வராகவும், ஞானசேகரன் டீன் ஆகவும் உள்ளார்கள்.