தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் விவகாரம் தொடர்பாக தற்போதைய நடிகர் சங்க நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் எழுந்தன.
இது தொடர்பான விவகாரம் இன்னும் நீண்டு கொண்டே வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தன்னுடைய ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைப்பதற்காக இன்று அனைத்து நிர்வாகிகளையும் நடிகர் விஷால் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் நடிகர் சங்கப் பிரச்சனையைப் பற்றியும் பேசினார்.
“நடிகர் சங்கத் தலைவர்களில் சரத்குமார் ராதாரவி, அவர்கள் இருவர் மீது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவர் மீதும் நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்.
நடிகர் சங்க இடம் 19 கிரவுண்ட், ஒருகாலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பலரது வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி சங்கம் வளர்ந்து கட்டடம் உருவானது. அந்த இடம் இன்று மயானம் போல காட்சி தருகிறது.
அதைக் கட்டச் சொல்வது என் தனிப்பட்ட நலன் கருதியல்ல, சிரமப்படும் 2500 நடிகர்களுக்காத்தான், குடும்பங்களின் சந்தோஷத்துக்கு ஏதாவது வழி பிறக்காதா என்கிற எண்ணத்தில்தான் கட்டச் சொல்கிறேன்.
எனக்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஒன்றுமில்லை. சங்கத்தின் பொறுப்பிலுள்ளவர்கள், பலபேர் மத்தியில் என்னை நாய் என்கிறார்கள், ராதாரவி இழிவாகப் பேசினார்.
என்னைக் கடனை அடைக்கச் சொன்னார், நடிப்பைக் கற்றுக் கொள்ளச் சொன்னார், ஒவ்வொன்றாக நான் முடிப்பதற்குள் அவர்கள் ஏப்பம் விட்டு விடுவார்கள்.
2500 குடும்ப மகிழ்ச்சிக்காகத்தான் இதைப் பேசுகிறேன். ஊழல் இல்லை என்கிறார்கள், ஏன் அவர்கள் சொன்ன தேதியில் கூட கட்டடம் கட்டவில்லை. இந்த முறையாவது தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கட்டும் .நாடக நடிகர்களில் தனிப்பட்ட யாரையும் எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர்களுக்காகப் போராடுகிறோம். எனக்கு நாற்காலி ஆசை இல்லை, பொறுப்பு கொடுத்தால் ஏற்றுச் செயல்படுவேன்.
என் தரப்பில் நியாயமில்லாமலா சிவகுமார், நாசர், ஆர்யா, ஜீவா, பொன்வண்ணன், மன்சூரலிகான், ஆனந்தராஜ் போன்றவர்கள் நான் சொல்வதை ஆதரிக்கிறார்கள். எனக்காக அல்ல நியாயத்துக்காக ஆதரிக்கிறார்கள்,” என்று விஷால் பேசினார்.