‘சாஹசம்’ படத்தில் ஆஸ்திரேலிய அழகி ‘அமெண்டா’…

ஸ்டார் மூவீஸ் சார்பாக நடிகர் தியாகராஜன் தயாரித்து வரும் படம் ‘சாஹசம்’.

பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாசர், தம்பி ராமைய்யா, சோனுசூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி, தேவதர்ஷினி, மாங்கா கதாநாயகி லீமா பாபு, மலேசியா அபிதா, நளினி, சின்னி ஜெயந்த், பெசன்ட் நகர் ரவி, சுவாமி நாதன், லண்டன் இந்து, பிரம்மாஜி, சாய்பிரஷாந்த், ஹேமா, ராவ்ரமேஷ், கோட்டா சீனிவாசராவ், ரியாஸ்கான், கிருஷ்ணவம்சி, மிப்பு, ஹலோ FM சுரேஷ், சாய்ராம் ராஜேந்திரநாத், என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

அருண்ராஜ் வர்மா இயக்கி வரும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஒரு பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி நடனமாடியுள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடிக்கும் நாயகியை நீண்ட நாட்களாக தேடி வந்தார்கள். தற்போது ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெண்டா என்ற இளம் அழகியை கண்டு பிடித்து படத்தின் நாயகியாக நடிக்க வைத்து வருகிறார்கள். கடந்த 40 நாட்களாக அமெண்டா இப்படத்தில் நடித்து வருகிறாராம்.

‘‘சாஹசம்’ படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை என்பதால் இளமையான, அழகான நடனமாட தெரிந்த பெண்ணை கடந்த எட்டு மாதங்களாக இந்தியா முழுவதும் தேடிவந்து, அமண்டாவை கண்டு பிடித்து கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறோம்,” என படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தியாகராஜன் கூறினார்.

இந்தியாவைச் சேர்ந்த அம்மாவுக்கும், இங்கிலாந்து நாட்டு அப்பாவுக்கும் பிறந்த 19 வயதே நிரம்பிய அமண்டா ஒரு ஆஸ்திரேலியா வாசி. பாலே நடனத்தில் பல பரிசுகளை வென்ற அமண்டா லண்டன் நடிப்பு பள்ளியில் பட்டம் பெற்றவர். அம்மா சமைத்து போடும் இந்திய உணவை ரசித்து சாப்பிடுவாராம் அமண்டா. நீளமான வசனங்களை கூட நொடியில் மனப்பாடம் செய்து கொண்டு வசனத்திற்கேற்ப உச்சரிப்புடன் நடிப்பில் வெளுத்து வாங்கி விடுகிறாராம்.

நாசருடன் நடிக்கும் போது அமண்டாவின் நடிப்பு நாசரையே அசர வைத்ததாம். தமிழ்ப் பட உலகிற்கு மற்றுமொரு கைபடாத ரோஜா என நாசர் பாராட்டியுள்ளார். அமண்டாவின் பழகும் விதம், காலம் தவறாமை, தொழில் சிரத்தை, கிரங்க வைக்கும் அழகு, மற்றும் கொஞ்சும் தமிழ் இவை எல்லாம் மொத்த படக் குழுவினரையும் வியக்க வைத்து விட்டதாம்.

பிரஷாந்த் அமண்டா பற்றி கூறுகையில், “ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. அமண்டாவின் வரவு தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி என்றும், சாஹசம் படம் வெளியீட்டுக்கு பிறகு வெகுவாக பேசப்படும் கதாநாயகி ஆவார்,” என்றும் அமண்டா புகழ் பாடுகிறார் பிரசாந்த்.

சாஹசம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வெகு விரைவில் நடைபெற உள்ளது. மே மாதம் படம் வெளி வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

Vai Raja Vai – Official Trailer 2

Read Next

‘காபி வித் டிடி’யில் ‘ஓ காதல் கண்மணி’ கூட்டணி