ரஜினிகாந்தின் மகள், தனுஷின் மனைவி என்ற அடையாளம் இருந்தாலும் தனித்து ஒரு இயக்குனராகவும் வெற்றி பெற வேண்டும் என்று ‘வை ராஜா வை’ படத்தில் ஐஸ்வர்யா தனுஷ் உழைத்திருக்கிறார் என்று அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே ஐஸ்வர்யாவைப் பாராட்டுகிறார்கள்.
இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகள் பிரியா ஆனந்த், டாப்ஸீ, வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி, நடிகர்கள் விவேக், மனோபாலா மற்றும் பலர் கலந்த கொண்டனர்.
சூதாட்டத்தை மையப்படுத்திய இந்தக் கதை ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும் என்று அனைவருமே குறிப்பிட்டனர். முதல் படத்தை வித்தியாசமான கதைக்களமாகக் கொண்ட படமாக இயக்கிய ஐஸ்வர்யா இரண்டாவது படத்திலேயே கமர்ஷியல் விஷயத்தைத் தொட்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒரு பாடலுக்கு நடனமாடிக் கொடுத்திருக்கிறார். இவரோடு சேர்த்தால் இந்தப் படத்தில் இப்போது ஐந்து இயக்குனர்கள் இடம் பிடித்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குனர் வசந்த், மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா என ஐந்து இயக்குனர்களின் தனிப்பட்ட உழைப்பு இந்தப் படத்தில் உள்ளது.
கௌதம் கார்த்திக்கு இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்து திருப்பு முனையைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
‘வை ராஜா வை’ – மே 1ம் தேதி வெளியாக உள்ளது.