நெடுஞ்சாலைப் பயணத்தில் ‘9 – 10’…

இயக்குனர் பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் பணியாற்றியவரும், பல தெலுங்குப் படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியவருமான விஜய் சண்முகவேல் அய்யனார் இயக்கும் படம் ‘9 – 10’.

இந்தப் படத்தை ஹீரோ சினிமாஸ் தயாரிக்க ‘சிலந்தி’ படத்திற்கு இசையைமத்த கார்த்திக் இசையமைக்கிறார்.

‘காந்தர்வன்’ படத்தில் நாயகனாக நடித்த கதிர் நாயகனாக நடிக்க, மோகன்லால் நடித்த மலையாளப் படமான ‘கீதாஞ்சலி’ படத்தில் நடித்த ஸ்வப்னா மேனன் இந்தப் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார்.

9 மணியிலிருந்து 10 மணி வரைக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. ஸ்வப்னா ஒரு முக்கிய விஷயமாக சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு காரில் செல்கிறார். அந்தக் காரின் டிரைவராக கதிர் வருகிறார். கதிரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்று வினோதமாக இருக்கிறது. எரிச்சலுடனே காரில் பயணம் செய்கிறார் ஸ்வப்னா. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இவர்களைப் பின் தொடர்ந்து போலீசும் செல்கிறது. காஞ்சிபுரம் சென்றதும் ஸ்வப்னா, கதிருக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கிறார். பின்னர் கதிர், ஸ்வப்னாவுக்கு அதை விட பேரதிர்ச்சி கொடுக்கிறார். அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

“இந்தப் படம் பல சுவாரசியமான திருப்பங்களுடனும், அதிரடி ஆக்ஷனுடனும், நகைச்சுவையுடனும் இருக்கும். ஒரு 20-20 மேட்ச் பார்த்தது போன்ற பரபரப்பு இருக்கும்,” என்கிறார் படத்தின் இயக்குனர்.

இந்தப் படத்திற்காக சென்னை – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், படத்திற்காக ஒருவர் தற்கொலை செய்து கொள்வது போல் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். அதை நிஜமென்று நம்பி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் திரண்டு விட்டார்களாம். பின்னர் விஷயம் போலீஸ் வரை சென்று அவர்களும் வந்து விட்டார்களாம். இது சினிமா படப்பிடிப்பு என்று விளக்கிச் சொன்ன பிறகுதான் கூட்டம் கலைந்து சென்றதாம்.

தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தியது புதுமையான அனுபவமாக அமைந்தது என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

Read Previous

Uttama Villain – Official Trailer – 3

Read Next

Kaaval – Official Trailer