சின்ன படங்கள் ஓட வேண்டும் – அபிராமி ராமநாதன் பேச்சு

பசவா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கமல்தீப் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி யுள்ள படம் ‘பானு’.

2002-ல் நடந்த ஒரு உண்மைச் சம்பத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஜீ.வி. சீனு இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த நந்தினிஸ்ரீ நாயகியாக நடித்துள்ளார். கே.அப்துல் ரகுமான் ஒளிப்பதிவு செய்ய உதயராஜ் இசையமைத்து இருக்கிறார்.

‘பானு ‘ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட தமிழ் டிஜிட்டல் பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி. சேகரன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அபிராமி ராமநாதன் பேசும் போது,

”தியேட்டர்களுக்கு படம் கொடுப்பது சின்ன படத் தயாரிப்பாளர்கள்தான். ஆண்டுக்கு 160 படங்கள் வந்தால் 20 படங்கள்தான் பெரிய படங்கள், மற்றவை எல்லாம் சிறிய படங்கள் தான். பெரிய படங்களை மட்டும் நம்பினால் சினிமாத் தொழிலாளர்கள் என்ன ஆவார்கள்? சினிமாவை மட்டும் நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வு கொடுப்பவை சின்ன படங்கள்தான்.

எவ்வளவோ பேர் படமெடுக்க வருகிறார்கள், பணம் சம்பாதிப்பதை விட நல்லபடம் எடுத்தோம் என்கிற பெயரைச் சம்பாதிக்க, வாழ்த்தைச் சம்பாதிக்கவே பலரும் படமெடுக்க வருகிறார்கள். டிவியில் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் சினிமாவை நம்பித்தான் ஓட்டுகிறார்கள்.

ஒருவர் 10 சின்ன படங்கள் எடுத்தால் அதில் ஒரு படம் ஓடினால் போதும், அதை வைத்து 20 படங்கள் எடுப்பார். ஆனால் பெரிய படம் எடுப்பவர் ஒரு படம் எடுத்து அதுவும் ஓடவில்லை என்றால் காணாமல் போய்விடுவார். ‘பானு’ மாதிரியான சின்ன படங்கள் ஒடவேண்டும்,” என்றார்.

விழாவில் நாயகன் ஜீ.வி.சீனு, நாயகி நந்தினிஸ்ரீ, ஒளிப்பதிவாளர் அப்துல் ரகுமான், இசையமைப்பாளர் உதயராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சாந்திலால், டாக்டர் காளிதாஸ், டிஜிட்டல் மேஜிக் அருள்மூர்த்தி, பி.ஆர்.ஓ. சங்கத் தலைவர் விஜயமுரளி ஆகியோரும் பேசினார்கள்.

Read Previous

Jackson Durai – Official Teaser

Read Next

சண்டி வீரன் – ஓர் அறிமுகம்