“வழக்கு எண் 18/9, மஞ்சப் பை, கோலி சோடா, சதுரங்க வேட்டை” போன்ற வெற்றிப் படங்களை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் தகற்போது ‘ஜிகினா’ படத்தை ஆகஸ்ட் 21ம் தேதி வெளியிட உள்ளது.
ரவி நந்தா பெரியசாமி இயக்கத்தில், விஜய் வசந்த், சானிய தாரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தை வெளியிடும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான லிங்குசாமி ‘ஜிகினா’ படம் பற்றி கூறியதாவது,
“ஜிகினா’ படம் இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் முக்கியமான படமாகும். பெருகி வரும் சமூக வலை தள குற்றங்களைப் பற்றியும், அதன் வாயிலாக பெருகும் குற்றத்தைப் பற்றியும், அறிமுகம் இல்லாத காதல் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றியும், மிகவும் ஜனரஞ்சகமாக, இன்றைய இளைஞர்களின் மன நிலையை தெள்ளத் தெளிவாக படம் எடுத்து காட்டி இருக்கிறார் எனது நண்பரும் இயக்குனரான ரவி நந்தா பெரியசாமி.
எனது நிறுவனத்தின் மூலம் வெளியாகும் படங்களின் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. நல்ல கதைகளையும் அதை சரி வர இயக்கும் இயக்குனர்களையும் இனம் பிரித்து அறிமுகம் செய்வதில் தான் சூட்சுமம் இருக்கிறது.
‘ஜிகினா’ படத்தில் நாயகனாக நடிப்பவர் விஜய் வசந்த். அவரைத் தவிர வேறு யாரேனும் இந்த பாத்திரத்துக்கு பொருந்தக் கூடிய அளவுக்கு இருந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அவருக்கு ஜோடியாக சானியா தாரா நடிக்கிறார். .சிங்கம் புலி, ரவி மரியா,’ கும்கி’ அஷ்வின் , ‘டாடி’ செந்தில், சுகு வெங்கட், குட்டி ஸ்ரீதேவி, மற்றும் ஆன்சன் பால் ஆகியோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
புதிய இசை அமைப்பாளர் ஜான் பீட்டர்ஸ் சிறப்பாக இசை அமைத்து உள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் ரங்காவின் மகன் பாலாஜி ரங்கா இந்தப் படத்துக்கு மிக அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இளைய தலைமுறையினருக்கு இந்தப் படம், படமாக மட்டும் அல்ல பாடமாகவும் அமையும்,” என்கிறார் லிங்குசாமி.