டி. ராஜேந்தரின் இளைய வாரிசு குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் ‘இது நம்ம ஆளு’.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன், நயன்தாரா, சூரி மற்றும் பலர் நடிக்க எப்போதோ ஆரம்பமான இந்தப் படத்தின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இரண்டு பாடல்கள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டி உள்ளதாம்.
இது பற்றி இயக்குனர் பாண்டிராஜ் இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். “இரண்டு பாடல்கள் இல்லாமல் படத்தின் நீளம் 131 நிமிடங்கள், டிரைலரும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. விரைவில் இசை வெளியீடு, பட வெளியீடு பற்றி தயாரிப்பாளர் அறிவிப்பார்,” என டிவீட்டியிருந்தார்.
அந்த அறிவிப்பை சிம்பு நேற்றுதான் வெளியிட்டார். “இறுதி மிக்ஸிங்கில் ‘இது நம்ம ஆளு’ இசை உள்ளது. இசை வெளியீட்டுத் தேதி பற்றி விரைவில் அறிவிப்போம். இசை ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக இருக்கும். காத்திருக்க முடியவில்லை, வந்து கொண்டிருக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் அடுத்த வெளியீடு ‘இது நம்ம ஆளு’ படம்தான். அநேகமாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.