குபேரன் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக குபேரன் பொன்னுசாமி தயாரிக்கும் படம் ‘சதுரன்’.
கே.ராஜீவ் பிரசாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க ராஜாஜ், வர்ஷா, காளி வெங்கட், பாவா லட்சுமணன், அத்திக் அஹமது, தமிழ், ராஜு ஈஸ்வரன், கயல் தேவராஜ், கெளதம் கிருஷ்ணா, உமாமகேஸ்வரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சுரேஷ் கிருஷ்ணாவிடம் ‘பாட்ஷா’ படம் தொடங்கி உதவி இயக்குநராகவும் பின்னர் இணை இயக்குநராகவும் பணிபுரிந்தவர்தான் ராஜீவ் பிரசாத். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத்தின் மகன்.
இயக்குனராக அறிமுகமாகும் ‘சதுரன்’ படம் பற்றி ராஜீவ் பிரசாத் கூறியதாவது,
“சதுரன்’ என்றால் திறமைசாலி, புத்திசாலி, நகரவாசி, சாதுரியமானவன் என அர்த்தம்.
சென்னையில இருக்கிற ஒரு ஆட்டோ டிரைவரோட வாழ்க்கையில நடக்கிற சம்பவம்தான் இந்தப் படம். அதனால அந்த எழுத்துக்களை ஆட்டோவுக்குள்ள இருக்கிற மாதிரி டிசைன் பண்ணியிருக்கேன்.
ஆட்டோவுல யதார்த்தமா நடக்கிற ஒரு சம்பவத்தால அந்த ஆட்டோ டிரைவரோட வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுது. அதனால அவனைச் சேர்ந்தவங்க எப்படி பாதிக்கப்படறாங்க அப்படின்றதுதான் இந்தப் படத்தோட கதை. இதை த்ரில்லர் கலந்த ஒரு ஆக்ஷன் படமா உருவாக்கியிருக்கோம்.
ஒரு நாள் இரவுல நடக்கிற சம்பவங்கள்தான் இந்தப் படம். மருத்துவத்தை மையப்படுத்திய ஒரு ஆக்ஷன் படம். மருத்துவத் துறையில இருக்கிற சில மைனஸ் விஷயங்களை இந்தப் படத்துல சொல்றன்.
‘மூடர் கூடம்’ படத்துல நடிச்ச ராஜாஜ் இந்தப் படத்துல நாயகனா நடிச்சிருக்காரு. நஸ்ரியா மாதிரி ஒரு ஹீரோயின் வேணும்னு தேடினேன். அப்ப கிடைச்சவங்கதான் படத்தோட ஹீரோயின் வர்ஷா. படம் நடிக்க வரும் போது அவ்வளவா தமிழ் தெரியாது. இப்ப சரளமா பேச ஆரம்பிச்சிட்டாங்க. இந்தப் படத்துக்காக ரொம்ப இன்வால்வ்மென்ட்டா நடிச்சாங்க.
இந்தப் படத்துல யதார்த்தமான ஒரு நடிகர் வேணும்னுதான் பார்த்துக்கிட்டிருந்தேன். அந்தக் கதாபாத்திரத்துக்கு ராஜாஜ் ரொம்ப பொருத்தமா நடிச்சிருக்காது. இந்தக் கதைக்கு முன்னணி ஹீரோ வேணும்னு எனக்குத் தோணலை. அந்த அளவுக்கு கதைதான் படத்துல பெருசா பேசப்படும். ராஜாஜ் இந்தப் படத்துல ரொம்ப யதார்த்தமா நடிச்சிருக்காரு. ஒரு நேர்மையான ஆட்டோ டிரைவரா நடிச்சிருக்காரு. இன்னமும் இப்படி ஆட்டோ டிரைவர் நிறைய பேர் இருக்காங்க.
‘சதுரன்’ கண்டிப்பா ஒரு மாறுபட்ட பமா இருக்கும், அதே சமயம் ஒரு விழிப்புணர்வு படமாவும் இருக்கும்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ராஜீவ் பிரசாத்.
‘வஜ்ரம்’ படத்தைத் தயாரித்த ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ் பட நிறுவனம் ‘சதுரன்’ படத்தை இம்மாதம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.