ரொமான்டிக் த்ரில்லராக உருவாகும் ‘கண்ணாடி’

‘மதுர வீரன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து V ஸ்டுடியோஸ் நிறுவனம் அமலாபால் நடிக்கும் ’ஆடை’ படத்தைத் தயாரித்து வருகிறது.

இதற்கடுத்து ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘கண்ணாடி’ என்ற படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்து வருகிறது.

‘மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன்’ ஆகிய படங்களிலும், பல தெலுங்குப் படங்களிலும் நாயகனாக நடித்த சந்தீப் கிஷன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார்.

இந்தியில் புகழ் பெற்ற நடிகைகளான அனுஷ்கா ஷர்மா, பர்ணீதி சோப்ரா, வாணி கபூர் போன்ற பல பிரபல வெற்றிபட ஹீரோயின்களை அறிமுக படுத்திய யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஆன்யா சிங்கை அவர்கள் தயாரித்த ‘கைதி பேண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் ‘கண்ணாடி’ திரைப்படத்தின் கதையை ஆன்யா சிங்கிற்கு பரிந்துரைத்து V ஸ்டுடியோஸ் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆன்யா சிங்கை அறிமுகம் செய்கின்றனர்.

இப்படத்தில் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘திருடன் போலிஸ், உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்க்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

“ஹாரர் படங்கள் என்றாலே சம்பிரதாயமாக வந்து செல்லும் வழக்கமான திகில் காட்சிகளாக மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறோம். திரைப்படங்களை இயக்க வருவதற்கு முன் பல படங்களின் VFX காட்சிகளை அமைத்த அனுபவம் உண்டு. அந்த அனுபவத்தைக் கொண்டு இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை முன்னணி VFX ஸ்டுடியோக்களுடன் இணைந்து உண்மைக்கு நிகராக வடிவமைக்கிறோம். மேலும் ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு இத்திரைப்படத்தை ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாக்கி வருகிறோம்,” என்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜூ.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதன் முதல் பார்வை மற்றும் இசை விரைவில் வெளிவரவிருக்கிறது.

Read Previous

‘மீ டூ’ பணக்காரர்கள் பிரச்சினை – இயக்குனர் கரு பழனியப்பன்

Read Next

அடங்க மறு – டிரைலர்