ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்த ‘சர்கார்’ படம் தீபாவளியன்று வெளியானது.
படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை தீயில் போட்டு எரிக்கும் காட்சியும், படத்தில் வில்லியான வரலட்சுமிக்கு, ஜெயலலிதாவின் நிஜப் பெயரான கோமளவல்லி என்ற பெயரை வைத்ததும் சர்ச்சையைக் கிளப்பியது.
தமிழக அமைச்சர்களின் எதிர்ப்பை அடுத்து அந்தக் காட்சிகளை ‘சர்கார்’ படக்குழு நீக்கியது.
இருப்பினும் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்கள். நேற்று ‘சர்கார்’ படக்குழுவினர் படத்தின் வெற்றியைக் கேக் வெட்டிக் கொண்டாடினர். அவர்கள் வெட்டிய கேக்கில் மிக்சி, கிரைண்டர் ஆகியவை கேக்கில் டிசைன் செய்யப்பட்டிருந்தது.
எது சர்ச்சையைக் கிளப்பியதோ அதை கேக் வடிவில் செய்து வெட்டி கொண்டாடியிருப்பது வேண்டுமென்றே செய்த செயல் போலத் தோன்றுகிறது.
சமூக வலைத்தளங்களில் பலரும் இதைக் குறிப்பிட்டுப் பகிர்ந்து வருகிறார்கள்.