பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘தாரை தப்பட்டை’. இப்படம் இளையராஜா இசையமைத்துள்ள 1000மாவது படம். இப்படத்தை பொங்கலன்று வெளியிட உள்ளார்கள்.
இளையராஜாவின் 1000மாவது படம் என்பதால் அதற்கு முன் மிகப் பிரம்மாண்டமான அளவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தலாம் என இயக்குனர் பாலா திட்டமிட்டிருந்தாராம். அதற்கான தொலைக்காட்சி உரிமம் கூட தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு மிகப் பெரும் தொகைக்கு விற்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக அப்படி ஒரு விழா வேண்டாம் என இளையராஜா தெரிவித்தார் என்கிறார்கள். இருந்தாலும் 1000மாவது படம் ஆயிற்றே, சிறிய அளவில் பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்தாவது விழாவை நடத்தி விடலாம் என்றும் பாலா யோசித்தாராம். பாலா இந்த அளவிற்கு உயர்ந்து நிற்க பத்திரிகையாளர்களும் முக்கிய காரணம்.
பாலாவின் ஒவ்வொரு படம் வெளிவரும் போதும் அந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் தாங்கிப் பிடிப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
நேற்று இளையராஜாவிற்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே உரசல் ஏற்பட்டதால் பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்து விழா நடத்த முடியுமா என்ற எண்ணத்திற்கு தற்போது பாலாவும் வந்துவிட்டாராம்.
அதனால் ‘தாரை தப்பட்டை’ இசை வெளியீட்டு விழா, நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.