தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் சில புதிய படங்களை வாங்கி வெளியிட்ட நிறுவனம் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட்.
இந்நிறுவனம் தயாரிக்க உள்ள 3 புதிய படங்களிலும் கதாநாயகனாக நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படங்களின் இயக்குனர், மற்ற நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இது பற்றி ஜெயம் ரவி கூறுகையில்,
“நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களைத் தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் பேரார்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம்.
தமிழ் சினிமாவில் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். நான் கவனித்த வகையில் இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களை கண்டு நான் வியந்திருக்கிறேன். அவர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களை வெளியிடுவது மற்றும் அதை மிகச்சிறப்பாக விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பது வரை மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில், இவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன்.
நிச்சயமாக, ஆக்கப்பூர்வமான, வித்தியாசமான கதைகளுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த திரைப்பட இயக்குனர்கள் இல்லையெனில் இது சாத்தியமில்லை. அவர்களின் நீண்ட பயணத்தின் ஒரு அங்கமாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்காக ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் அனைவருக்கும் நான் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் ஜெயம் ரவி.
பல முன்னணி நடிகர்கள் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கத் தடுமாறி வரும் நிலையில் ஜெயம் ரவி, ஒரே தயாரிப்பாளரின் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பது பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியிருக்கும்.