2016ம் வருட தீபாவளிக்கு “கொடி, காஷ்மோரா, கடலை, திரைக்கு வராத கதை” ஆகிய 4 படங்கள் வந்தாலும் ‘கொடி, காஷ்மோரா’ ஆகிய இரண்டு படங்களுக்கிடையேதான் நேரடிப் போட்டியே.
‘எதிர் நீச்சல், காக்கிச் சட்டை’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ் முதன் முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் ‘கொடி’. அவருக்கு ஜோடியாக முதன் முறையாக த்ரிஷா நடிக்கிறார். மற்றொரு ஜோடியாக ‘பிரேமம்’ நாயகி அனுபமா பரமேஸ்வரன் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். ஒரு அரசியல் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
‘ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசைமைப்பில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள். கார்த்தி ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா முதன் முறையாக நடிக்கிறார்கள். ‘பிளாக் மாஜிக்’ அடிப்படையிலான இந்தக் கதையில் கார்த்தி மூன்று வேடங்களில் நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு ஃபேன்டஸியான படமாக இப்படம் உருவாகியுள்ளது.
‘கொடி, காஷ்மோரா’ ஆகிய இரண்டு படங்களும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளாவிலும், கர்நாடகாவிலும் தமிழிலேயே வெளியாகிறது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
‘கொடி’ படம் ‘தர்மயோகி’ என்ற பெயரிலும், ‘காஷ்மோரா’ படம் அதே பெயரிலும் வெளியாகிறது.
இந்த தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் ‘கொடி’ படம் மாஸ் ஆகவும், ‘காஷ்மோரா’ படம் கிளாஸ் ஆகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.