தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்று யு டியுபில் முதல் முறையாக 300 மில்லியன் சாதனையைப் படைக்க உள்ளது. அதாவது 30 கோடி வியூஸ் (பார்வைகள்).
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடிய ‘மாரி 2’ படப் பாடலான ‘ரௌடி பேபி’ பாடல்தான் அந்த மகத்தான சாதனையைப் படைக்க உள்ளது.
ஜனவரி மாதம் 2ம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்ட இந்தப் பாடலின் வீடியோ, அந்த நிமிடத்திலிருந்தே தொடர் சாதனையை இதுவரை நிகழ்த்தி வந்திருக்கிறது.
16 நாட்களில் 100 மில்லியன் சாதனை, 42 நாட்களில் 200 மில்லியன் சாதனையைப் படைத்த இந்தப் பாடல் அடுத்த சில தினங்களுக்குள்ளாக 300 மில்லியன் சாதனையைப் படைத்துவிடும். இந்த செய்தி எழுதப்பட்ட நிமிடத்தில் (13.3.2019 – 3 pm) 29 கோடியே 92 லட்சத்திற்கும் சற்று கூடுதலான பார்வைகளைப் பெற்றுள்ளது. இன்னும் 8 லட்சம் பார்வைகள் கிடைத்தால் 300 மில்லியன் கிடைத்துவிடும்.
தென்னிந்திய மொழிகளில் இதுவரை எந்த ஒரு திரைப்படப் பாடலும் 300 மில்லியன் சாதனையைப் படைத்தது இல்லை. முதல் முறையாக ‘ரௌடி பேபி’ பாடல் படைக்க உள்ளது. இத்தனை நாட்களாகியும் தினமும் இந்தப் பாடல் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது.
இந்தப் பாடலின் லிரிக் வீடியோ 7 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ 84 லட்சத்தைக் கடந்துள்ளது. அதையெல்லாம் சேர்த்தால் பாடலின் மொத்த பார்வைகள் 38 கோடியைத் தொடும்.
இப்படிப்பட்ட சாதனையை வேறு ஒரு பாடல் அவ்வளவு சீக்கிரத்தில் முறியடிக்க முடியாது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.