தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ‘டிங் டாங் புரோமோ’ இன்று வெளியிடப்பட்டது.
மிகவும் வித்தியாசமான முறையில் எடிட் செய்யப்பட்டுள்ள அந்த புரோமோ ரசிகர்களை மட்டுமல்லாது, திரையுலகத்தினரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
அந்த புரோமோ குறித்தும் சினிமா டிரைலர்கள் பற்றிய தனது அனுபவத்தையும் ‘வெயில், காவியத் தலைவன், ஜெயில்’ படங்களின் இயக்குனர் வசந்தபாலன் முகப்புத்தகத்தில் சுவாரசியமாக பதிவிட்டுள்ளார்…..
“எண்பதுகளின் இறுதியில் எனக்கு நினைவு தெரிந்து திரைப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிற படத்தின் இடைவேளையின் போது திரையிடப்படும்.
இப்போதும் அப்படி தானே காட்டப்படுகிறது என்று திட்டாதீங்க. அப்போது டிரைலர் காட்ட திரையரங்கு ஒன்று தான் வழி.
திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்ட விளம்பர டயர் வண்டி மேளதாளத்துடன் மாலை நேரங்களில் ஊர் முழுக்க சுற்றி வரும். அதில் இரு வல்லவர்கள் திரைப்படத்தின் இடைவேளையில் சென்னை திரைப்படக்கல்லூரி மாணவர்கள் இயக்கிய புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடித்துள்ள ஊமை விழிகள் டிரைலர் காட்டப்படும் என்று எழுதப்பட்டிருக்கும்.
அப்போது திரையரங்குகளில் ஓடுகிற 35 எம்எம் திரைப்படங்களுக்கு நடுவே சினிமாஸ்கோப் டிரைலர் காட்டப்பட்டது. எங்களூரில் அது மிக பெரிய அதிசயம். திருவிழா கொண்டாட்டம் என்றே சொல்லலாம். அந்த டிரைலரை பார்க்கவே அப்போதெல்லாம் மக்கள் திரையரங்குக்கு செல்வார்கள். டிரைலர் முடிந்தவுடன் எழுந்து வந்துவிடுவார்கள்.

என் சித்தப்பா தியேட்டரில் வேலை பார்த்ததால் இடைவேளைக்கு மட்டும் திரையரங்குக்கு சென்று விட்டு திரும்புவேன். தினமும் டிரைலர் பார்க்க போவேன். அதுவும் ஊமைவிழிகள் திரைப்படத்தில் வருகிற அந்த கிளைமாக்ஸ் கார் ஷாட் திரையில் புது அனுபவம்.
ஊமை விழிகள் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு திரைப்பட கல்லூரி மாணவர்கள் இயக்கிய படங்கள் மீது பெரும் கவர்ச்சி உண்டானது. ஆபாவாணன் அவர்கள், ஆர்கே செல்வமணி அவர்கள் இயக்கிய புலன் விசாரணை,கேப்டன் பிரபாகரன் டிரைலர் ரசிகர்களை பித்து பிடிக்க வைத்தது.
உழவன் மகன், இணைந்த கைகள் டிரைலரை நான் எத்தனை தடவை திரையரங்குக்கு சென்று பார்த்தேன் என்றே தெரியவில்லை. மூங்கில் கோட்டை திரைப்படத்தின் டிரைலர் ஹாலிவுட் படம் பார்ப்பதை போல இருக்கும், அந்த திரைப்படம் பொருளாதாரக் காரணங்களால் வெளிவரவேயில்லை. சிறுநகரங்களில் உள்ள தேநீர் கடைகள் முழுக்க அந்த பேச்சாக இருக்கும். எப்படி நம்ம ஆளுங்க இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்குறானுங்க அந்த பிலிமை திருடி நமக்கு காமிக்கிறானுங்களா நம்பவே முடியல… இப்படி பல்வேறு பேச்சுகள் உலவும்.
சாட்டிலைட் சேனல்கள் வந்த பிறகு மின்சாரக் கனவு திரைப்படத்தின் டிரைலர் ஒரு புதுவிதமான அலையை உருவாக்கியது. ஆன்டனி என்ற விளம்பர பட எடிட்டரின் வரவு அந்த மேஜிக்கை நிகழ்த்தியது.
இன்று டீசர் மற்றும் டிரைலர் நன்றாக இருந்தால் தான் திரையரங்குக்கே மக்கள் வருகிறார்கள். அதனால் டிரைலர் படத்தை விட மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
you tube டிரைலருக்கு சென்சார் இல்லாததால் கற்பனை கரைபுரண்டு ஓடுகிறது. பரபரப்பாக இருக்க வேண்டும். இந்தியா trending ஆக மாற வேண்டும் என்பது தான் விதி. எத்தனை views and likes என்பது கணக்கிடப்பட்டு டிரைலர் சக்ஸஸ் பார்ட்டிகள் கூட அங்கங்கு நடக்கிறது. அதனால் டீசர் மட்டும் எடிட் செய்யும் எடிட்டர்கள் பெருவாரியாக முளைத்துவிட்டனர்.
படத்தை எடிட் செய்பவர் ஒருவர் டிரைலர் எடிட் செய்பவர் ஒருவர் என்ற நிலமை வந்து விட்டது. செக்க செவந்த வானத்தின் டிரைலர் படத்தின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்தது.
சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் ஏற்கனவே பெரிய வெற்றி பெற்று விட்டது. இப்போது வந்துள்ள டிங்டாங் புரோமோ வீடியோ மிக கவர்ச்சிகரமாக உள்ளது. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் உள்ளது.
இதை எடிட் செய்துள்ள பிரேமம் திரைப்படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனுக்கு வாழ்த்துகள்.
பிரேமம் திரைப்படமே எடிட்டிங்கில் மிக புதுமையாக இருந்தது. கவர்ச்சியான டிரெண்ட் செட்டிங் எடிட். படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் என் வாழ்த்துகள்.
திரைமொழியை நன்றாக உள்வாங்கி திரைப்படம் இயக்கும் தமிழின் மிக முக்கியமான இயக்குநர். வெற்றி பெற வாழ்த்துகள்,” என வசந்தபாலன் பதிவிட்டுள்ளார்.