தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – விஷால் அணி மகத்தான வெற்றி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் நடிகர் சங்க செயலாளராக இருக்கும் விஷால் தலைமையில் ஒரு அணியும், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், கேயார் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.

கடுமையான போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் எந்த அணி வெற்றி பெறும் என்று ஒரு பரபரப்பு இருந்தது.

நேற்று காலை ஆரம்பமான தேர்தல் மாலை வரை நடைபெற்றது. 1200 தயாரிப்பாளர்கள் ஓட்டளிக்கும் உரிமையுடைவர்கள். அவர்களில் 1059 பேர் நேற்று வாக்களித்தனர்.

மாலை ஆரம்பமான ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே விஷால் முன்னணியில் இருந்தார். இறுதியாக 476 ஓட்டுக்கள் பெற்று தலைவர் பதவிக்கு தேர்வு பெற்றார்.

அவருடைய அணியைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் துணைத் தலைவர்களாகவும், எஸ்.ஆர்.பிரபு பொருளாளராகவும், கே.இ.ஞானவேல் ராஜா செயலாளர்களில் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கேயார் அணியில் போட்டியிட்ட கதிரேசன் இரண்டு செயலாளர்களில் ஒருவராக தேர்வானார்.

ராதாகிருஷ்ணன் தலைமையில் போட்டியிட்ட அணிக்கு முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு, செயலாளர் டி. சிவா உள்ளிட்டோர் ஆதரவு அளித்தனர். இந்த அணியினர் விஷால் தலைமையிலான அணியை கடுமையாக விமர்சித்து வந்தனர். அனைத்தையும் மீறி விஷால் அணி வெற்றி பெற்றிருக்கிறது.

21 செயற் குழு உறுப்பினர்களிலும் பெரும்பாலும் விஷால் அணியே வெற்றி பெற்றிருக்கிறது.

தலைவர் பதவிக்கு தேர்வான பின் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அளித்த பேட்டியில்,

“ஓட்டு அளித்த அனைத்து முதலாளிகளுக்கும் நன்றி. எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. வரலாற்று முக்கியத்துவமான விஷயங்கள் நடக்கப் போகிறது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொற்காலம் போல செயல்படுவோம். மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். திருட்டு விசிடி, ஆன்லைன் ப்ரைசி, தமிழ் ராக்கர்ஸ் ஆகியோருக்கு இப்போது சொல்கிறேன். நாங்கள் ஜெயித்து விட்டோம், இப்போது வந்து பாருங்கள். முதல்கட்டமாக விவசாயிகளுக்கும், சில தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கையும் நிறைவேற்ற பாடுவேன்,” என்றார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பட்டியல்

தலைவர்

விஷால்

துணைத் தலைவர்கள்

கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ்

செயலாளர்கள்

கே.இ. ஞானவேல்ராஜா
கதிரேசன்

பொருளாளர்

எஸ்.ஆர்.பிரபு

21 செயற் குழு உறுப்பினர்கள்

சுந்தர் .சி
பார்த்திபன்
பாண்டிராஜ்
ஆர்.வி. உதயகுமார்
மன்சூர் அலிகான்
எஸ்.எஸ். துரைராஜ்
ஆர்.கே. சுரேஷ்
ஆர்யா
எஸ். ராமச்சந்திரன்
ஜெமினி ராகவா
அபினேஷ் இளங்கோவன்
எ.எல். உதயா
எம். கஃபார்
பிரவீன்காந்த்
மனோஜ்குமார்
பி.எல். தேனப்பன்
எஸ்.வி. தங்கராஜ்
கே. பாலு
எம்.எஸ். அன்பு
எஸ்.எஸ். குமரன்
டி.ஜி. தியாகராஜன்

Read Previous

ஒரே பாடல் பெற்றுத் தந்த ஒரு கோடி

Read Next

‘பரதம் 5000’ – 5000 பரதக் கலைஞர்கள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

Most Popular