‘ப.பாண்டி’ – ராஜ்கிரணை வியக்க வைத்த தனுஷ்

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘ப. பாண்டி’ படத்தில் ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் கதையைக் கேட்டதுமே நடிக்க சம்மதித்த ராஜ்கிரண், தனுஷின் இயக்கத் திறமையைக் கண்டு படப்பிடிப்பில் வியந்திருக்கிறார்.

அவற்றைப் பற்றி பெருமையுடன் அவர் சொன்னது…

“இயக்குனர் சுப்பிரமணிய சிவா ஒரு நாள் என்னைப் பார்க்கணும்னு வந்தாரு. வந்து ஒரு கதையைச் சொன்னாரு. “இளைய சமுதாயம், முதியோர்களை ரொம்ப உதாசீனப்படுத்துது. அவங்க உணர்வுகளை மதிக்கிறதில்லை, அப்படியிருக்கக் கூடாது, உணர்வுகள் எல்லாருக்கும் ஒண்ணுதானே..இதுதான் படத்தோட விஷயம்னு,” சொன்னாரு. நல்லாருக்குப்பான்னு சொன்னேன். போய் தயாரிப்பாளர் கிட்ட பேசிட்டு வரன்னு சொன்னாரு.

மறுநாள் வந்து அண்ணே, உங்க மருமகன் தனுஷ்தான் படத்தைத் தயாரிச்சி, இயக்கப் போறாருன்னு சொன்னாரு. அப்புறம் தனுஷ் வந்து கதை சொல்லட்டுமான்னு கேட்டாரு. வேணாம் தம்பி, இந்தப் படம் பண்ணுவோம்னு சொன்னேன்.

இறையருளால தமிழ் சினிமாவுல இன்னைக்கு தனுஷ் முக்கியமான இடத்துல இருக்காரு. தெலுங்குல அவர் படம் டப்பிங் ஆகி ஹிட்டாகுது. ஹிந்தியிலயும் நடிச்சிருக்காரு. ஹாலிவுட்டுலயும் நடிக்கப் போறாரு. இப்படி இவ்வளவு உயரத்துல இருக்கிற ஒருத்தர், அவர் முதன் முதலா இயக்கப் போற படத்துக்கு ரஜினிகாந்த் சார் கால்ஷீட் கேட்டால் கூடக் கொடுப்பாரு. ஆனால், என்னைத் தேடி வந்திருக்காருன்னா, சும்மாவா வந்திருப்பாரு.

இந்தப் படத்தோட கதையில் முதியோர்களோட உணர்வுகளை மதிக்கணும், எல்லா வயதினருக்கும் உணர்வுகள் ஒண்ணுதான்னு சொல்றோம். இங்க பலருக்கு வாழ்க்கையோ 60 வயசுக்கு மேலதான் ஆரம்பிக்குது. நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு, ஏழை மக்களுக்கும்தான் 60 வயசுல வாழ்க்கை முடியுது.

தனுஷ் இந்தப் படத்துல என்ன சொல்றாருன்னா, இளைஞனா இருக்கும் போதே சேமித்து வையுங்க. உங்க குடும்பத்து விஷயங்களை எல்லாம் செஞ்சி முடிச்சி, வயசான பிறகு அந்த சேமிப்பு உங்க கிட்ட இருந்தால் நீங்க புறக்கணிக்கப்பட மாட்டீங்கன்னு சொல்றாரு.

இந்தக் கதையை சீரியசா சொல்லாமா, ஜாலியா என்டர்டெயின்மென்ட்டா சொல்லியிருக்காரு. வீட்டுக்குப் போன பிறகுதான் அடடா..இந்த விஷயத்தையெல்லாம் வச்சிருக்காங்களேன்னு யோசிக்கத் தோணும்.

தனுஷைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமா இருக்கு. இந்த வயசுல எவ்வளவு பக்குவம். என்கிட்ட வேலை வாங்கணும், ரேவதி மேடம் கிட்ட வேலை வாங்கணும். ரெண்டு சின்னப் பசங்க இருக்காங்க. யார் யார் கிட்ட எப்படி வேலை வாங்கணுமோ, அதை அழகா வாங்குவாரு.

ஒரு இயக்குனருக்கு இருக்க வேண்டிய எல்லா தகுதியும் தனுஷ் கிட்ட இருக்கு,” என தனுஷ் இயக்கம் பற்றி  பல விஷயங்களை ஆச்சரியத்துடன் சொல்லிக் கொண்டே போகிறார் ராஜ்கிரண்.

‘ப.பாண்டி’ ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

தமிழிலும் சாதனை படைக்க வரும் ‘சிவலிங்கா’

Read Next

Junior Superstars talent show is Back with a Bang