சமூக வலைத்தளங்கள், முழுமையாக விலகினார் சிம்பு

ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடிகிறது என அவ்வப்போது திரைப்பட நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களது பெயரில் கணக்கு ஆரம்பித்து செயல்பட்டு வந்தார்கள்.

நட்சத்திரங்களின் ரசிகர்கள் லட்சக் கணக்கில் அவர்களைத் தொடர்வதும், புகழ்ந்து பேசுவதுமாக என ஒரு வழித் தடமாகவே அவர்களின் சமூக வலைத்தள கணக்குள் இருந்தன.

ஒருவர் எதிர்மறையான கருத்துக்களைச் சொன்னாலோ, விமர்சனம் செய்தாலோ அதை ஏற்க மனமில்லாமல் அவர்களை ‘பிளாக்‘ செய்வதும் நடைபெற்று வந்தது.

ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்களைப் பற்றிய தகவல்களை வெளியிடும் செலவில்லாத இலவச தளமாகவும் சமூக வலைத்தளங்கள் பயன்பட்டன.

இதனிடையே, நட்சத்திரங்கள் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் போது அவை சமூக வலைத்தளங்களிலும் எதிரொலித்தன. அதன் காரணமாக சிலர் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகவும் செய்தனர்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சமயத்தில் விஷால் டிவிட்டரை விட்டு விலகினார். குஷ்பு கடந்த மாதம் டிவிட்டரை விட்டு வெளியேறினார்.

சிம்பு நேற்று முதல் சமூக வலைத்தளங்களை விட்டு நிரந்தரமாக வெளியேறினார். ‘பீப் பாடல்’ பிரச்சனை சமயத்தில் அவருடைய கணக்கை ‘அட்மின்’ ஒருவரை நியமித்து செயல்படுத்தி வந்தார்.

சமீபத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவிற்கு ஆதரவாக சிம்பு கருத்துக்களை வெளியிட்டார். அந்த சமயத்தில் யாரோ சிம்பு, ஓவியாவைத் திருணமம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் என சிம்புவின் டிவிட்டர் கணக்கில் ‘போட்டோஷாப்’ செய்து அவரே வெளியிட்ட கருத்தாக பரவ வைத்தார். அப்போது சிம்பு காட்டமாக அவருடைய கருத்தை வெளியிட்டார். “சாத்தானின் கடவுளை வெளியேற வைத்து விடாதீர்கள்,” என்றார்.

இந்நிலையில் நேற்று திடீரென ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

டிவிட்டரில் சிம்புவை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து வந்தனர். ஃபேஸ்புக்கிலும் பல லட்சம் தொடர்பாளர்கள் இருந்தனர். சிம்பு எந்த விஷயத்தைப் பற்றிப் பதிவிட்டாலும் அதை டிரென்டிங்கில் கொண்டு வருவார்கள் சிம்பு ரசிகர்கள். இது சிம்பு ரசிகர்களுக்கு நிச்சயம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும். விலகியது மட்டுமல்லாமல் சமூக வலைத்தள கணக்குகளை அவர்  ‘டெலிட்’டும் செய்துவிட்டார்.

விலகுவதற்கு முன்பு சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது.
ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்”, என அதில் தெரிவித்துள்ளார்.

Read Previous

ஒரே நாளில் அண்ணன், தம்பி படங்களின் டீசர்

Read Next

‘ஸ்பைடர்’ – தமிழில் சொந்தக் குரலில் பேசிய மகேஷ் பாபு