அஜித், சிவா கூட்டணியில் ‘வீரம், வேதாளம்’ படங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள மூன்றாவது படமான ‘விவேகம்’ படம் நாளை உலகம் முழுவதும் சுமார் 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
முன்பதிவுள்ள பல தியேட்டர்களில் ஞாயிற்றுக் கிழமை வரை 95 சதவீதத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
தமிழ்நாட்டிற்குப் பிறகு மலேசியாவில் அதிக தியேட்டர்களிலும், அடுத்து அமெரிக்காவில் அதிக தியேட்டர்களிலும் இப்படம் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் அஜித்திற்கு இருக்கும் அமோகமான வரவேற்பால் வெளிநாடுகளில் மட்டும் 2000 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது.
அஜித் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த படங்களைக் காட்டிலும் ‘விவேகம்’ படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருப்பதற்குக் காரணம் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர்.
டீசர் 2 கோடி பார்வைகளையும், டிரைலர் 1 கோடி பார்வைகளையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள், கலைஞர்கள் இந்தப் படம் வழக்கமான தமிழ் சினிமா அல்ல சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு தமிழ் சினிமா என ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்திவிட்டனர். அதற்கேற்றபடிதான் படத்தின் டீசரும், டிரைலரும் அமைந்துள்ளது.
ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். காஜல் அகர்வால் முதல் முறையாக அஜித்துடன் சேர்ந்த நடிக்கிறார் என இப்படத்தில் சில முதல் முறை விஷயங்களும் உள்ளன.
முற்றிலும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சில ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளார்கள்.
அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரையில் ‘வேதாளம்’ படத்தைக் காட்டிலும் இப்படம் மிகப் பெரும் வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்துவிட்டால் நிச்சயம் தமிழ்த் திரைப்பட வசூல் வரலாற்றில் தனி இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதே சமயம், இப்படத்தின் டிக்கெட்டுகள் 500, 1000, ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு சில அஜித்தின் தீவிர ரசிகர்கள் இப்படம் முதல் நாளிலேயே 100 கோடி வசூலிக்கும் என சமூக வலைத்தளங்களில் பெருமைபட்டுக் கொள்கிறார்கள்.
நாளை இந்த நேரம் ‘விவேகம்’ படத்தின் வெற்றியும், வசூலும் எந்த அளவிற்கு இருக்கும் என்பது பாக்ஸ் ஆபீஸில் தீர்மானிக்கப்பட்டுவிடும்.