‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இன்னும் எத்தனை சீசன் நடந்தாலும் முதல் சீசனில் பங்கு பெற்று பாதியிலேயே விலகிய ஓவியாவைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.
அந்த அளவிற்கு ரசிகர்கள், நேயர்கள் மனதில் ஓவியாவுக்கென தனி இடம் உண்டாகி இருக்கிறது.
இத்தனைக்கும் அறிமுகமான ‘களவாணி’ படம் தவிர சொல்லிக் கொள்ளும்படியான எந்த ஒரு படத்திலும் ஓவியா இதுவரை நடிக்கவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஆரம்பத்தில் அவருக்கு பெரிய ஆதரவில்லை. சக போட்டியாளர்களுடன் சண்டைதான் போட்டுக் கொண்டிருந்தார். இருந்தாலும் ஓரிரு வாரங்களில் ‘வாழைப்பழம் கேட்டது, ஸ்பிரே அடிச்சிடுவேன் என சொன்னது, கொக்கு நெட்ட கொக்கு என உளறியது, நீங்க ஷட்-அப் பண்ணுங்க என்று பேசியது, தினமும் காலை 8 மணிக்கு புத்துணர்வுடன் நடனமாடியது’ என ஓவியாவின் அனைத்து விஷயங்களையும் மக்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள்.
அனைவரும் ஓவியாவை ஒதுக்கிய பின்னும் அவர்களை ஓட ஓட ஒளிய வைத்தார் ஓவியா.
நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் இன்னமும் அவரைப் பற்றி நிகழ்ச்சியிலும், வெளியிலும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பத்து நாட்களுக்கு முன்பு யு டியுபில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஓவியா. அந்த வீடியோ இதுவரை 11 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.
நேற்று, மீண்டும் டிவிட்டரில் வந்து ஒரு பதிவைப் போட்டார் ஓவியா. அவர் போட்ட சில நிமிடங்களுக்குள் கமெண்ட்டுகள், ரிடிவீட்டுகள், லைக்குகள் எனப் பறந்தன. இதுவரை அந்த டிவீட் 7800 கமெண்ட்டுகளும், 13000 ரிடிவீட்டுகளும், 43000 லைக்குகளும் வாங்கியுள்ளது. ஒரு தமிழ் நட்சத்திரத்தின் டிவீட் ஒன்றிற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்குமா என்பது ஆச்சரியம்தான். அந்த விதத்தில் இது சாதனையாகவும் இருக்கலாம்.
இந்த விஷயத்தில் ரஜினிகாந்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது ஓவியாவின் புகழ்.
‘2.0’ மேக்கிங் வீடியோ பற்றி ரஜினிகாந்த் கடந்த 25ம் தேதி டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார். அந்த டிவீட்டிற்கு ஓவியாவின் நேற்றைய டிவீட்டை விட குறைவான வரவேற்பே கிடைத்துள்ளது. ரஜினியின் டிவீட்டிற்கு 2200 கமெண்ட்டுகளும், 8800 ரிடிவீட்டுகளும், 28000 லைக்குகளும் மட்டுமே கிடைத்துள்ளன.
தமிழ்த் திரையுலகத்தில் வசூல் மன்னனாக இருக்கும் ரஜினிகாந்தை விட பிக் பாஸ் ஓவியா ஒரே மாதத்தில் இவ்வளவு புகழைப் பெற்றுள்ளார் என்பது பலருக்கும் ஆச்சரியம் கலந்த பொறாமையை ஏற்படுத்தியிருக்கும்.