‘கருப்பன்’ – விஜய் சேதுபதியின் அடுத்த வெற்றி

ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் விஜய் சேதுபதி, தன்யா மற்றும் பலர் நடிக்க, பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் ‘கருப்பன்’.

டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை இன்று வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா, ஏ.எம்.ரத்னம், இயக்குனர் பன்னீர் செல்வம், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி, ஸ்டன்ட் மாஸ்டர் ராஜசேகர் விஜய் சேதுபதி, தன்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பன்னீர் செல்வம், இந்தப் படத்தின் கதையைக் கூடக் கேட்காமல் சில ஹீரோக்கள் அவரைப் புறக்கணித்ததைப் பற்றிக் கூறி வருத்தப்பட்டார்.

‘‘ரேணிகுண்டா’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பின் இந்தக் ‘கருப்பன்’ படத்தின் கதையை சில ஹீரோக்களிடம் சொல்வதற்கு முயன்றேன். ஆனால், அவர்கள் என்னைச் சந்திக்கக் கூட விருப்பம் தெரிவிக்காமல் என்னைப் புறக்கணித்தனர். இரண்டு படம் இயக்கிய எனக்கே இந்த நிலை என்றால் முதல் படம் இயக்க காத்திருக்கும் உதவி இயக்குனர்களின் நிலை ரொம்பவே கொடுமையானது.

இந்த ‘கருப்பன்’ படம் உருவாவதற்குக் காரணமான சிலருக்கு நான் நன்றியைச் சொல்ல வேண்டும். இயக்குனர் சீனு ராமசாமிதான் என்னை விஜய் சேதுபதியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தக் கதையைக் கேட்ட விஜய் சேதுபதியின் மேனேஜர் ராஜேஷ், இயக்குனர் ரத்தினசிவா, தயாரிப்பாளர் காமன்மேன் கணேஷ், ஸ்ரீதர் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்தாக வேண்டும.

நான் பஸ்ஸூக்காக காத்திருந்து காத்திருந்து தளர்ந்து போன நேரத்தில் எனக்கு ஏசி பஸ்ஸே கிடைத்திருக்கிறது. டிரைவராக விஜய் சேதுபதியும், கண்டக்டராக ரத்னம் சாரும் வந்து அமைந்தது என் பாக்கியம்.

இந்தப் படத்தின் போது விஜய் சேதுபதியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். தூங்கும் போது கூட படத்தைப் பற்றிய சிந்தனையில் தான் இருப்பார். இந்தப் படத்தை ஒற்றை ஆளாகத் தாங்கிக் கொண்டு அவ்வளவு சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி,” என்றார் இயக்குனர் பன்னீர் செல்வம்.

நிகழ்ச்சியில் ‘கருப்பன்’ படத்தின் டீசர், டிரைலர் ஆகியவற்றைத் திரையிட்டார்கள்.

விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டின் அடுத்த வெற்றிப் படம் இந்தக் ‘கருப்பன்’ என்பதை கண்டிப்பாகக் கூறலாம்.

Read Previous

வருடத்திற்கு 243 கோடி சம்பாதிக்கும் ஷாரூக் கான்

Read Next

தயாரிப்பாளரின் சொந்த வெளியீட்டில் ‘மெர்சல்’ ?