விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியைக் கெடுத்த ‘புரியாத புதிர்’

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு பல வித்தியாசமான படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி.

இந்த 2017ம் ஆண்டில் அவர் நடித்து வெளிவந்த ‘கவண், விக்ரம் வேதா’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகவும் அமைந்தது. அவருடைய நடிப்புக்கும் பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது.

ஆனால், கடந்த வாரம் விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘புரியாத புதிர்’ படம் அவருடைய தொடர் வெற்றியைக் கெடுத்த ஒரு படமாக அமைந்துவிட்டது.

அழுத்தமில்லாத கதை, பரபரப்பில்லாத திரைக்கதை, நடிக்கவே வாய்ப்பில்லாத காட்சிகள் என ரசிக்கும்படி எதுவுமே இல்லாமல் இருந்தது.

அதிலும் படம் கடந்த சில வருடங்களாக எடுக்கப்பட்டு, மிகவும் தாமதமாக வெளியானதால் படத்தில் விஜய் சேதுபதியைப் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது.

அவரது சிறந்த நடிப்பை ‘கவண், விக்ரம் வேதா’ படங்களில் பார்த்துவிட்டதால், அவற்றுடன் ஒப்பிடும் போது ‘புரியாத புதிர்’ படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகச் சுமாராகவே இருந்தது.

எப்படியோ படம் வெளிவந்தால் போதும் என இந்தப் படத்திற்காக பெரிதாக எந்த புரமோஷன் விஷயங்களும் இல்லாததும் படத்திற்கு மைனஸ் ஆகிவிட்டது.

அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் வந்துள்ள இந்தப் படம் வரவேண்டிய நேரத்தில் சரியாக வந்திருந்தால் சுமாரான வெற்றியையாவது பெற்றிருக்கும்.

‘புரியாத புதிர்’ படத்துடன் வெளிவந்த ‘குரங்கு பொம்மை’ படம் பலரின் பாராட்டுக்களுடன் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. விதார்த் நடித்த ‘குரங்கு பொம்மை’ படத்தை ஓட வைக்கும் பெருமை விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’ படத்திற்குத்தான் என தாராளமாகச் சொல்லலாம்.

Read Previous

கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘வேலைக்காரன்’ ?

Read Next

இன்று மாலை ‘மெர்சல் – மாச்சோ’ பாடல் வரிகள் வீடியோ