பவுன்சர்கள் அட்டகாசம், அன்று சிவகார்த்திகேயன், இன்று மகேஷ் பாபு

தமிழ் சினிமாவின் சில ஹீரோக்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் ‘பவுன்சர்கள்’. ஜிம்முக்கு போய் உடம்பை கட்டுமஸ்தாக ஏற்றி வைத்துக் கொண்டு திரைப்பட விழாக்களுக்கு தனியார் பாதுகாப்பாக வருபவர்களைத்தான் ‘பவுன்சர்கள்’ என்று அழைப்பார்கள்.

சில ஹீரோக்கள் எந்த விழாக்களுக்கு வந்தாலும் ஒரு பந்தாவுக்காகவே இப்படி பவுன்சர்களை வரவழைப்பார்கள். ஹீரோ நடந்து வரும் போது ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிகாந்த் நடந்து வருவது போன்று அவர்களுக்குள் நினைத்துக் கொள்வார்களோ என்னமோ தெரியவில்லை.

தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு நடிக்கும் ‘ஸ்பைடர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பலரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இட நெருக்கடியால் அரங்கம் திணறியது.

நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்களையும் உள்ளே அனுமதிக்காமல் பவுன்சகர்கள் பிரச்சனை செய்ததும் நடந்தேறியது.

இப்படித்தான் ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, சத்தியம் தியேட்டரில் நடைபெற்ற போது பவுன்சர்களால் பிரச்சனை ஏற்பட்டு பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்தனர். அதன் பின் சிவகார்த்திகேயன் அனைத்து பத்திரிகையாளர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

அதே போல் இன்று நடைபெற்ற விழாவிற்கு நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமைய வாங்கியிருந்த தனியார் தொலைக்காட்சி மட்டுமே படம் பிடித்தார்கள். மற்ற பத்திரிகை, இணைய பத்திரிகையாளர்கள் உள்ளே நுழைவதற்கே சிரமப்பட்டார்கள்.

மகேஷ் பாபுவின் முதல் அறிமுக விழாவே கெடுபிடியுடன் நடந்துள்ளது. இதற்கு முன் ‘ஸ்ரீமந்துடு’ படத்தின் தமிழ் டப்பிங்கான ‘செல்வந்தன்’ பட விழா நடந்த போதெல்லாம் சாதாரணமாக வந்து போனார் மகேஷ் பாபு.

ஆனால், இந்த முறை எதற்கு இப்படிப்பட்ட ‘பந்தா’ என்பது தெரியவில்லை. விழாவை நடத்தியவர்களுக்கே வெளிச்சம்.

Read Previous

20 வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் மோகன்லால், பிரகாஷ்ராஜ்

Read Next

முதல் படம் நடித்தது போன்ற உணர்வு – மகேஷ் பாபு