தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்காகவும் சில நடிகர்கள் தங்களது தோற்றத்தை மாற்றி நடித்து பெயர் வாங்குவார்கள்.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர்தான் இப்படி தோற்றத்தை மாற்றி நடித்து பெயர் பெற்றவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வரிசையில் இப்போது மாதவனும் இடம் பிடித்துள்ளார்.
அவர் இயக்கம் நடிப்பில் உருவாகி வரும் விஞ்ஞானி நம்பி நாரயணன் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ராக்கெட்ரி’ படத்திற்காக வயதான தோற்றத்திலும் நடித்து வருகிறார். அதற்காக இரண்டு வருடங்களாக அவர் தாடி வளர்த்து வந்தார். இப்போது இளமைத் தோற்றத்தில் நடிக்க வேண்டியிருப்பதால் அந்த தாடியை எடுத்துவிட்டு க்ளீன் ஷேவ் தோற்றத்தில் காட்சி தருகிறார்.
இதுபற்றி, “2 வருடங்களுக்குப் பிறகு ஷேவ் செய்துள்ளேன். இளமையான நம்பி நாராயணன் பிரான்ஸுக்குச் சென்று அங்கு வெற்றி பெற தயாராக இருக்கிறார்,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
‘ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட்’ படம் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.