நடிகராக ஆசைப்பட்ட இசையமைப்பாளர் சிற்பியின் வாரிசு

‘நாட்டாமை’ படத்தில் இடம் பெற்ற ‘கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும்…’ என்ற ஒரே பாடலின் மூலம் பிரபலத்தின் உச்சிக்குப் போனவர் இசையமைப்பாளர் சிற்பி.

தொடர்ந்து ‘மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், ராசி, தேடினேன் வந்தது, வருஷமெல்லாம் வசந்தம், உன்னை நினைத்து’ என பல படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் சிற்பி.

இசையமைப்பாளரின் வாரிசு இசையமைப்பாளராகத்தான் வரவேண்டும் என்பதில்லை, நடிகராகவும் வரலாம். சிற்பியின் மகன் நந்தன் ராம் ‘பள்ளிப் பருவத்திலே’ படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

இசையமைப்பளார் மகன் எப்படி நடிகராக அறிமுகமானீர்கள் என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே காரணத்தைச் சொல்கிறார் நந்தன் ராம்.

“என்னையும் இசையமைப்பாளராக ஆக்க வேண்டும் என்றுதான் அப்பா ஆசைப்பட்டார். பி.காம் படி என்றார், ஆனால், நான் விஸ்காம் தான் படிப்பேன் என்றேன். அப்படி பி.காம் சேர்த்துவிட்டால் வேண்டுமென்றே பெயில் ஆகிவிடுவேன் எனச் சொன்னேன். அப்புறம் எனது ஆசையைப் புரிந்து கொண்ட அப்பா, விஸ்காம் படிக்க வைத்தார்.

நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டதும், இயக்குனர் வாசு பாஸ்கர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு என்னை நாயகனாக்கினார். இந்தப் படம் நிச்சயம் என்னை நன்றாக பேச வைக்கும்,” என நம்பிக்கையுடன் சொல்கிறார்  நந்தன் ராம்.

இசையமைப்பாளர் சிற்பியிடம் ஒரு காலத்தில் ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றியிருக்கிறார். மகன் நந்தன் ராமை வாழ்த்த வேண்டும் என ரகுமானிடம் சிற்பி கேட்க, அதற்கு சம்மதித்த ரகுமான், நந்தன் ராமை வாழ்த்தியருக்கிறார்.

பழைய நட்பை மறக்காமல் ரகுமான் அழைத்துப் பேசிய குணத்தை புகழ்ந்து சொல்கிறார் சிற்பி.

வாசு பாஸ்கர் இயக்கத்தில் நந்தன் ராம், வெண்பா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘பள்ளிப் பருவத்திலே’ படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் நடைபெற்றது. அக்டோபர் மாதம் படம் வெளிவருகிறது.

Read Previous

விஷால் படங்களில் அதிக வசூலில் ‘துப்பறிவாளன்’

Read Next

ஜெயப்பிரதாவுக்காக நடிக்க சம்மதித்த நெப்போலியன்