மிஷ்கின் உதவியாளர் பிரியதர்சினி இயக்கத்தில் வரலட்சுமி

இயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, அவர் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒரு த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க உள்ளார். வில்லன் உட்பட மற்ற கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.

‘விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்த சாம். சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் பிரியதர்சினி கூறியதாவது,

“அதிரடியான, மர்மங்களும், திருப்பங்களும் நிறைந்த கதையின் மையக் கதாபாத்திரம் ஒரு பெண் என்பது முடிவான பிறகு, வரலட்சுமியே அதற்கு ஒரே தேர்வாக இருந்தார். அவர் தன்னம்பிக்கையும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நடிகை. இத்திரைப்படம் அவரிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிக் கொணர்ந்து, ஒரு புதிய பரிமாணத்தில் அவரை நிலை நிறுத்தும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.

இப்படத்திற்காக ஒரு அருமையான, திறமையான தொழில்நுட்பக் குழுவினர் அமைந்தது என் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். ஒரு பெண் தொழிலதிபர், சிறந்த ஊடகவியலாளர், மின்னணு ஊடக நிபுணர் சரண்யா லூயிஸ், எனது தயாரிப்பாளராக அமைந்தது மிகவும் பெருமைக்குரிய ஒரு விஷயம். அவரது வழிகாட்டுதலில் அமைந்திருக்கிற இந்த குழு, எதிர்பார்ப்புகளை மிஞ்சும் திறமைகளை கொண்டுள்ளது,” என்கிறார் இயக்குனர் பிரியதர்சினி.

சென்னையில் வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி படப்பிடிப்பு துவங்கித் தொடர்ந்து நடைபெற உள்ளது. இத்திரைபடத்தின் முதல் பார்வையும், படத்தின் பெயரும் வரும் விஜயதசமி தினத்தில் வெளியிடப்பட உள்ளது.

Read Previous

மெர்சல் டீசர், 24 மணி நேரத்திய சாதனை என்ன ?

Read Next

இது வேதாளம் சொல்லும் கதை – டீசர்