‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி’ ஆகிய படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’.
ஜுன் 21ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை எஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது.
இது பற்றி லட்சமி ராமகிருஷ்ணன் கூறுகையில்,
“இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் அவற்றுக்குதான் முன்னுரிமை தருவார்கள்.
ஏஜிஎஸ் சினிமாஸ் எங்கள் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருப்பது எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம். தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு பெயர் போன ஏஜிஎஸ், எங்களை போன்ற சிறிய பட்ஜெட்டில் உருவான படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது.
இது எங்கள் குழுவினருக்கு மட்டும் கிடைத்த வெற்றி என்று நான் கூற விரும்பவில்லை, நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு பெரிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது என்று தான் கூறுவேன்.
ஏஜிஎஸ் சினிமாஸ் படத்தின் வெளியீட்டுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பதால், மிகப்பெரிய அளவில் படம் மக்களை சென்று சேரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இந்தப் படம் மனித உறவுகளைப் பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் யதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்றார்.
‘பசங்க‘ கிஷோர், லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பில், ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.