கஷ்டங்களை மறக்கச் செய்த வெற்றி – அபிமன்யு சிங்

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங்.

படம் பற்றி அபிமன்யு சிங் கூறியதாவது,

“இயக்குநர் வினோத் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தக் கதையில் அவ்வளவு அறிவுபூர்வமான விஷயங்கள் இருந்தது. என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் வரலாறும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கார்த்தி மிகச் சிறந்த மனிதர். அவர் எப்போதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகத் தெளிவாகவும் , முழு கவனத்தோடும் செய்யக்கூடியவர். காட்சிக்கு காட்சி தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றிக் கொண்டே இருப்பார். அது சரியாக வரும் வரை வேலை செய்து கொண்டே இருப்பார்.

அவருடைய பங்களிப்பால் ஒட்டு மொத்த காட்சியும் சிறப்பாக வரவேண்டும் என்று சிரத்தை எடுத்து வேலை செய்வார். கார்த்தி கண்ணியமானவர், கடின உழைப்பாளி. அதே சமயம் அனைவரிடமும் எளிமையாக பழகுபவர்.

இயக்குநர் வினோத் அவருடைய நடிகர்களை அதிகம் நேசிப்பார். எப்போதும் எதையும் அமைதியாகக் கையாளுவார். எப்போதும் மிகச் சிறந்த வேலையை எதிர்பார்ப்பார். காட்சிகள் சிறப்பாக வரும் வரை கடுமையாக உழைப்பார். அதிக கவனம், தூய்மையான மனம் போன்றவை எனக்கு வினோத்திடம் மிகவும் பிடித்தவை.

நாங்கள் வெயில் மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் கால நிலையில் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருந்தது. படப்பிடிப்பு முடிந்து ஒரு நாளைக்கு 15 முறை என் முகத்தை கழுவ வேண்டும். அங்கே அவ்வளவு தூசிப் படலம் இருக்கும். இப்போது படத்தின் வெற்றி எல்லா கஷ்டங்களையும் மறக்கடித்துள்ளது,” என்கிறார் அபிமன்யு சிங்.​

Read Previous

‘அறம்’ மூலம் அடையாளம் காணப்பட்ட ராமச்சந்திரன்

Read Next

மெர்சல் – ஆளப் போறான் தமிழன்…பாடல் – வீடியோ