‘அறம்’ மூலம் அடையாளம் காணப்பட்ட ராமச்சந்திரன்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ‘அறம்’ படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையின் அப்பாவாக நடித்து கண்கலங்க வைத்தவர் ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன்.

பல படங்களில் வில்லன்களுக்கு அடியாளாக சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர். ‘அறம்’ படத்தின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருடைய ‘அறம்’ பட அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில்,

“நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன். 17 வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்தேன். முதலில் ஒளிப்பதிவு துறையில் தான் பயில வந்தேன். ஆனால் காலம் என்னை துணை இயக்குனராக ஆக்கி விட்டது. அப்படியே சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதில் வந்த தொடர்பின் வாயிலாக ‘அறம்’ இயக்குனர் கோபி நாயனாரை சந்திக்க நேர்ந்தது.

‘அறம்’ படத்தின் கதையை படிக்க சொல்லி என்னிடம் கொடுத்தார். படிக்கும் போதே நான் செய்த கதாபாத்திரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்தை நான் தான் செய்யப் போகிறேன் என்பது அப்போது கூட எனக்குத் தெரியாது. கோபி சாரின் தெளிவு, சமூக பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவை அறத்துக்கு உரம்.

ஒரு சின்ன கதாபாத்திரத்திடம் கூட படைப்பு ரீதியாக படத்துக்கு பங்களிக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர் அவர். எனக்கு இவ்வளவு பெயர் வக்ர காரணமாக இருந்த இந்த கதா பாத்திரத்தைத் தந்த அவருக்கு நான் வாழ் நாள் முழுக்க கடமைபட்டு இருக்கிறேன்.

நயன்தாரா மேடம் மிகவும் எளிமையானவர். இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட எல்லோரிடமும் சகஜமாகப் பழகினார், எங்களை ஊக்குவிக்கவும் செய்தார். தயாரிப்பாளர் ராஜேஷ் எல்லோரையும் ஒரே மாதிரிதான் கவனித்தார். அவரது உபசரிப்பு எங்களை நெகிழ செய்தது.

படப்பிடிப்பு நடந்த இடமும், காலமும் மிக கடுமையானது. இன்று எங்கு போனாலும் எல்லோராலும் பாராட்டப்படும் இந்த கதாபாத்திரம் கிடைத்தமைக்கு நான் நிச்சயமாக கொடுத்து வைத்து இருக்க வேண்டும்,” என்கிறார் ராமசந்திரன்.

Read Previous

பேருந்து காட்சியை 10 நாள் படமாக்கினோம் – ரோஹித் பதக்

Read Next

கஷ்டங்களை மறக்கச் செய்த வெற்றி – அபிமன்யு சிங்