தமிழ் சினிமாவில் கலகலப்பான காமெடி குடும்பக் கதைகள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையைப் போக்க ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தைத் தயாரிக்க உள்ளார்கள்.
'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை படங்களைத் தயாரித்துள்ள கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் ராஜேஷ் மற்றும் ‘டோரா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் இப்படத்தைத் தயாரிக்கிறது.
யதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான படமாக உருவாக உள்ள இப்படத்தினை கதை எழுதி, இயக்க உள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம்.
இவர் 'களவாணி' படத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்தது மட்டுமன்றி 'இது வேதாளம் சொல்லும் கதை' மற்றும் 'பூமிகா' ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
'மிடில் கிளாஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இதில் முனீஸ்காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, ஆர்வி ஒளிப்பதிவாளராக, எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரிய உள்ளனர்.