புயல், மழையில் படமாக்கப்பட்ட ‘மாறா’

பிரமோத் பிலிம்ஸ் தயாரிப்பில், திலீப்குமார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாறா’.

இப்படம் வரும் 8ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒரு அழகான காதல் காவியமாக உருவாகியுள்ள இப்படம், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள சேர்ந்த பல்வேறு அழகான இடங்களில், மழைக்கு இடையில் படமாக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு ஒரு மிகச் சிறந்த காட்சி விருந்தாக உருவாகியுள்ளது என்கிறார் இப்படத்தின் இயக்குனர் திலீப்.

“படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் நாங்கள் சூறாவளி எச்சரிக்கைகளைப் பெற்றோம். அத்தகைய மோசமான வானிலையில் படப்பிடிப்பை மேற்கொண்டது மிகவும் கடினமாக இருந்தது. எனினும், வானிலை நிலவரத்தைப் புரிந்து கொண்டவுடன் நாங்கள் காட்சிகளை சரியாகத் திட்டமிட முடிந்தது. 

முதல் சில முறைகள் நாங்கள் மிகவும் பயந்தாலும், நாட்கள் செல்லச்செல்ல, ஒவ்வொரு நாளும் மேலும் எளிமையானதாகவும் மற்றும் குதூகலம் அளிப்பதாகவும் மாறியது. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அது ஒரு யூகிக்கும் விளையாட்டாகவே மாறிவிட்டது. 

சிறிது நாட்களுக்குப் பின், மழையில் படப்பிடிப்பு நடத்துவது ஒரு பிரச்சனையாகவே இல்லை. இருப்பினும் திரையில் அவ்வளவு மழையையும் நீங்கள் காணமுடியாது. மழை நிற்கக் காத்திருப்போம், அரை மணி நேரம் நிற்கும், அந்த இடைவெளியில் காட்சியை படம் பிடித்துவிடுவோம்.

படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க ஒரு கடலோர நகரத்தில் படமாக்கப்பட்டது. நாங்கள் சாலைகளில் விரிவாகப் படம் பிடித்தோம். சில சமயங்களில் அந்தப் பக்கமாக பைக்கில் வருபவர்களுக்கு அல்லது தெருவில் நடப்பவர்களுக்கு, அங்கு படப்பிடிப்பு நடப்பதே தெரியாது. இதனால் எங்களால் பல காட்சிகளை மிகவும் யதார்த்தமாகப் படம்பிடிக்க முடிந்தது.

பல காட்சிகள் பெரிய அளவில் திறந்தவெளிகளில் படம்பிடிக்கப்பட்டன. பல காட்சிகளில் கிட்டதட்ட 200 மீட்டர் தொலைவிலிருந்து ஜும் லென்ஸ்கள் மூலம் படம் பிடித்தோம். இதனால் நடிகர்களுக்கே தாங்கள் எங்கிருந்து படம் பிடிக்கப்படுகிறோம் என்பது பல நேரங்களில் தெரியாமல் இருந்தது. இதனால் அவர்கள் கதாபாத்திரமாகவே வாழ்ந்து கேமராவைப் பாராமலேயே பல காட்சிகளில் நடித்துள்ளனர். இத்தகைய காட்சிகளை நிச்சயம் சென்னையிலோ அல்லது தமிழகத்தின் வேறு எந்தவொரு பகுதியிலோ எங்களால் நிச்சயம் படம் பிடித்திருக்க முடியாது,” என்கிறார். கூறினார்.

2015 ஆம் ஆண்டில் ‘கல்கி’ என்ற குறும்படத்தை இயக்கிய திலீப்குமாரின் முதல் அறிமுக முழுநீளத் திரைப்படம் ‘மாறா’. 

பிரமோத் பிலிம்ஸ் சார்பாக பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ள இதிரைப்படத்தில், அலெக்சாண்டர் பாபு, மௌலி, பத்மாவதி ராவ் மற்றும் அபிராமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Read Previous

விஜய் டிவி – புதிய தொடர் ‘பாவம் கணேசன்’

Read Next

100 மில்லியன் பார்வைகளைத் தொட்ட ‘மாஸ்டர்’ – வாத்தி கம்மிங்…பாடல்

Most Popular