கமல்ஹாசன் பிறந்தநாள் – மூன்று நாள் விழா

இந்தியத் திரையுலகத்தில் 60 வருடங்களாக தனக்கென தனி பாதையை உருவாக்கி அதில் பயணித்து வருபவர் கமல்ஹாசன்.

தனது 65வது வயதில் 60 வருடங்கள் நடிகராக மற்றும் பல்துறை கலைஞராக இருந்து வருபவர்.

காலத்தால் அழிக்க முடியாத பல அரிய படைப்புகளையும், திரையுலகத்தில் பல புதிய யுக்திகள், தொழில்நுட்பங்களை உட்புகுத்தி தமிழ் சினிமாவை உயர்த்தியதில் முக்கிய பங்காற்றியவர்.

அவருடைய பிறந்தநாள் வரும் நவம்பர் 7ம் தேதி வர உள்ளது. அதைக் கொண்டாடும் விதத்தில் நவம்பர் 7, 8, 9 ஆகிய நாட்களில் தொடர் கொண்டாட்டமாக நடத்த கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த தினமன்று அவரது சொந்த ஊரான பரமக்குடியில் அவரது அப்பாவும், சுதந்திரப் போராட்ட வீரருமான டி.சீனிவாசன் திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினம்தான் சீனிவாசனின் நினைவு தினமும் ஆகும்.

நவம்பர் 8ம் தேதி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலகக் குருவான பாலசந்தரின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. அந்நிகழ்வில் பாலசந்தர் குடும்பத்தாரும், திரையுலகத்தினரும் கலந்து கொள்கிறார்கள்.

அன்று மதியம் காந்தியாரின் 150வது ஆண்டு விழாவினைக் கொண்டாடும் விதத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் மாலை 3.30 மணிக்கு ‘ஹே ராம்’ படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற உள்ளது. அப்போது கமல்ஹாசனுடன் கலந்துரையாடல் நிகழ்விற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 9ம் தேதி இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 44 ஆண்டுகள் கமல்ஹாசனுடன் இணைந்து பயணித்த ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நட்சத்திரங்கள் அந்த இசை விழாவில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்த இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை விஜய் டிவி வாங்கி உள்ளதாம்.

Read Previous

அமோக வரவேற்பில் ‘கைதி’

Read Next

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘அந்த நாள்’ முதல் பார்வை

Most Popular