தெலங்கானா அரசின் உதவியால், ‘கல்கி 2898 ஏடி’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தினை தயாரித்துள்ளது. பெரிய பொருட்செலவு என்பதால், பல்வேறு வழிகளில் இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
ஜூன் 27-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கு தெலங்கானா அரசு பெரும் உதவி ஒன்றிணை செய்திருக்கிறது. என்னவென்றால் 27-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்திருக்கிறது. மேலும் 27-ம் தேதி மட்டும் 6 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது.
அதுமட்டுமன்றி மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் டிக்கெட் விலையினை 100 ரூபாய் அதிகப்படுத்தியும், தனி திரையரங்கில் டிக்கெட் விலையினை 75 ரூபாய் அதிகப்படுத்தியும் விற்க அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் 413 ரூபாயும், தனி திரையரங்கில் 265 ரூபாயும் இருக்கும். இந்த அனுமதி படக்குழுவினருக்கு பெரிய வகையில் உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல், முதல் நாள் சிறப்புக் காட்சிக்கு மல்டிப்ளக்ஸில் டிக்கெட் விலை 495 ரூபாயும், தனி திரையரங்கில் 377 ரூபாயும் இருக்கும் என்றும் கூறியிருக்கிறது. இவை அனைத்துமே 3டி தொழில்நுட்ப விலை இல்லாமல் என்பதும் நினைவுக் கூரத்தக்கது.
இந்த அறிவிப்பின் மூலம் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம், தெலங்கானா மாநிலத்தில் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.