தமிழில் விஜய் நடித்து 2011ல் வெளிவந்த ‘வேலாயுதம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து ‘‘ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜுலியட், புலி, அரண்மனை 2, மனிதன், போகன்” உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் இருந்து வரும் ஹன்சிகா கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கதாநாயகியாக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘பாட்னர்’ படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் யோகிபாபு கதாபாத்திரம் விபத்தில் ஒரு மருந்து செலுத்தப்பட்டதால் பெண்ணாக மாறிவிடுகிறது. அந்தப் பெண்தான் ஹன்சிகா. தோற்றத்தில் பெண்ணாகவும், மனதில் யோகிபாபுவாகவும் இருக்கும் நகைச்சுவைக் கதாபாத்திரம். இதில் ஹன்சிகாவின் நடிப்பு ரசிக்கும்படி இருந்து பாராட்டைப் பெற்று வருகிறது.
படம் குறித்தும், தனது திரையுலகப் பயணம் குறித்தும் ஹன்சிகா பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.
“நான் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்த 20 ஆண்டுகளில் சினிமாவில் நிறைய கற்றுக்கொண்டேன். கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதையும், ரசிகர்களின் ஆதரவும், உங்களை போன்ற ஊடகத்தினர் ஆதரவும் இருப்பதால் தொடர்ந்து நான் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். இனியும் என் பயணம் அப்படியே தொடரும்.
திருமணத்திற்குப் பிறகு என் வாழ்க்கையில் எந்த வித மாற்றமும் இல்லை, நான் நானாகத்தான் இருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன், இனியும் நடிப்பேன். எப்போதும் போல மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதனால், திருமணத்தால் என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.
‘பாட்னர்’ படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. அதைக் கேட்கும் போதே எனக்கு அது புரிந்து விட்டது, அதனால் தான் அந்த வேடத்தில் நடித்தேன். அனைத்து நடிகைகளும் டாம் பாயாக நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், இது முற்றிலும் வித்தியாசமான வேடம். தோற்றத்தில் ஒரு அழகான பெண்ணாக இருப்பேன். என்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் ஆண் போலவே இருக்க வேண்டும். சவாலான வேடமாக இருந்தது, அதில் சரியாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
மது அருந்தும் காட்சி தான் எனக்கு சவாலாக இருந்தது. எனக்கு எப்போதும் மது அருந்தும் காட்சியில் நடிக்கும் போது மிகவும் சவாலாக இருக்கும். மது அருந்திவிட்டு போதையில் இருப்பது போல் நடிக்க வேண்டும் என்றால் ரொம்பவே கஷ்ட்டமாக இருக்கும். இந்த படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் தான் எனக்கு சவாலாக இருந்தது. இயக்குநர் அடிக்கடி, “மேடம் ‘போகன், ரோமியோ ஜூலியட்” என்று சொல்லி, அந்தப் படங்களில் வரும் மது குடிப்பது போன்ற காட்சிகளை நினைவுபடுத்தியே இந்த படத்தில் உள்ள காட்சிகளை படமாக்கினார்.
நான் ஒரு ஜாலியான பெண் அதனால் எனக்கு இயற்கையாகவே நகைச்சுவை காட்சிகளில் நன்றாக நடிக்க முடிகிறது. அதே போல், நான் எப்போதும் நகைச்சுவை படங்களை விரும்பிப் பார்ப்பேன். நான் ஒரு கலர்புல்லான பெண், எனவே தான் எனக்கு நகைச்சுவை உணர்வு இயல்பாக இருப்பதாக நினைக்கிறேன்.
நிஜத்தில் ஆணாக மாறும் வாய்ப்பு கிடைத்தால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆக மாற வேண்டும்.
ஹன்சிகா கடந்த பல வருடங்களாகவே பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து அவர்களைப் படிக்க வைத்து வருகிறார்.
அது பற்றிய கேள்விக்கு, “31 பேரை தத்தெடுத்திருக்கிறேன், அவர்களுடைய படிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் செய்து வருகிறேன். தற்போது அவர்களுக்காக கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறேன். அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யவது மட்டும் இன்றி அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதை என் கடமையாக நினைக்கிறேன்.
ஏதோ ஏழை பிள்ளைகளை தத்தெடுத்து அவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை, அவர்களுக்கான உயர்தர கல்வியை கொடுக்க வேண்டும், அவர்களுடைய அத்தியாவாச தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தான் என் இலக்கு. மும்பையில் கல்வி கட்டணம் என்பது மிக அதிகமாக இருக்கிறது, அது சற்று எனக்கு சவாலாக இருந்தாலும், இதுவரை அதை சரியான முறையில் நான் செய்து வருவதற்கு கடவுள் தான் காரணம் என்று நினைக்கிறேன்,” என்றார்.
‘பாட்னர்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஹன்சிகா, ‘கார்டியன், காந்தாரி’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும், இரண்டு தெலுங்கு திரைப்படங்களிலும், இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.