‘கங்குவா’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து முதன் முறையாக பேசியிருக்கிறார் சூர்யா.
மும்பையில் அமேசான் ஓடிடி நிறுவனத்தின் 2024-ம் ஆண்டிற்கான படங்கள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இருந்து படங்கள் மற்றும் வெப் சீரிஸ் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் தமிழில் ‘கங்குவா’ படத்தின் ஓடிடி உரிமை பெரும் விலைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது அமேசான் ஓடிடி நிறுவனம்.
அமேசான் விழாவில்’கங்குவா’ படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவிற்காக பிரத்யேகமாக டீஸர் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டது படக்குழு. இந்த விழாவில் ‘கங்குவா’ படம் குறித்து சூர்யா பேசியதாவது:
“’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முதல் நாள் தொடங்கி, இறுதிவரை ஒவ்வொரு நாளும் பெரிதாகிக் கொண்டே இருந்தது. தயாரிப்பாளர் ஞானவேல், இயக்குநர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோருக்கு நன்றி.
கதையில் இருந்து படப்பிடிப்புக்கு செல்லும் போது ஏதேனும் ஒரு வகையில் சமரசம் இருக்கும். ஆனால், ‘கங்குவா’வில் அது நடக்கவில்லை. திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்தும், ஒரு படம் மிகவும் உற்சாகம் அளிப்பது ரொம்பவே முக்கியம். 150 நாட்கள் கடந்து படப்பிடிப்பு நடந்த போது, ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு உற்சாகமாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் ‘கங்குவா’ பிடிக்கும் என நம்புகிறேன்.
கடைசி 15 நாட்கள் படப்பிடிப்பு பாபி தியோலுடன் இருந்தது. முதல் நாளே சண்டைக் காட்சியில் தான் தொடங்கியது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பிரம்மாண்டமாக இருக்க பாபி தியோல் மிகவும் உதவினார்”
இவ்வாறு சூர்யா பேசினார்.
சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியேல், திஷா பதானி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ள படம் ‘கங்குவா’. இதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவன, யுவி கிரியேஷன்ஸ் மற்றும் பென் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறது.