சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக ‘என்றாவது ஒரு நாள்’ படம் தேர்வாகி உள்ளது.
ஏற்கெனவே இப்படம் 33 சர்வதேச விருதுகளை வாங்கி இருக்கிறது. வெற்றி துரைசாமி தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.
நிறைவு நாள் விழாவில் இயக்குநர் வெற்றி துரைசாமிக்கு விருதும் சான்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
விழாவில் வழங்கிய விருதை ஏற்றுக்கொண்டு, படத்தை இயக்கி தயாரித்திருந்த வெற்றி துரைசாமி பேசும் போது,
"இந்தப்படம் சிறந்தபடம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகை என வெவ்வேறு கேட்டகிரியில் இதுவரை 33 விருதுகளைப் பெற்றிருக்கிறது. இப்படி உலகத் திரைப்பட விழாக்களில் 33 சர்வதேச விருதுகளை வென்றிருந்தாலும் நம்ம சென்னையில் நடைபெற்ற திரைப்படவிழாவில் விருது பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவொரு நல்ல மோட்டிவேசன். நல்ல படங்களைத் தொடர்ந்து எடுப்பதற்கு இந்தவிருது பெரும் முனைப்பாக இருக்கும். அனைவருக்கும் நன்றி," என்றார்
‘என்றாவது ஒரு நாள்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரத்திற்கு நடுவர் சிறப்பு விருது கிடைத்தது. இந்த விருது கிடைத்ததைப் பற்றி அவர் கூறுகையில்,
"இந்தப் படத்தின் கதையோட்டத்தை கெடுக்காத அளவில் கேமரா வொர்க் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் படத்தின் இயக்குநர் வெற்றி துரைசாமி சார் காணுயிர் ஒளிப்படக் கலைஞர் (wildlife photographer) ஆக இருந்ததால் ஒளியின் மொழி அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைத்தார். அந்த வகையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார்.